இந்திய கடற்படை தலைமையகத்திலேயே புகுந்த கறுப்பு ஆடு! பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு போன சீக்ரெட் தகவல்கள்
டெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சொல்லி இப்போது போலீஸ் அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அந்த நபர் கடற்படை தலைமையகத்திலேயே பல ஆண்டுகள் உளவு பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்த அவர், அதை ஈடுகட்டவே இதுபோல உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகப் பலரும் கைது செய்யப்பட்டனர். பிரபல யூடியூபர், காவலாளி, கல்லூரி மாணவர் எனப் பலரையும் உளவு பார்த்ததாக அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கிடையே இந்தியக் கடற்படையின் தலைமையகத்திலேயே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக பல ஆண்டுகளாக உளவு பார்த்த நபர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவாளி கைது
இவர் ஆபரேஷன் சிந்துரின் போதும் கூட உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விஷால் யாதவ் என்ற நபரை காவலர் கைது செய்துள்ளனர். விஷால் யாதவ் என்ற அந்த நபர் கடற்படை மற்றும் பிற பாதுகாப்பு பிரிவுகள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து அனுப்பியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இந்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அவரது மொபைல் போனில் இருந்து பெறப்பட்ட தரவுகள் இதை உறுதி செய்கிறது.
ஹரியானாவைச் சேர்ந்தவர் விஷால். கடற்படை தலைமையகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். அவர் உளவு பார்த்தது உறுதியான நிலையில், ராஜஸ்தான் போலீசாரின் உளவுப்பிரிவால் விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லை மாநிலம் என்பதால் ராஜஸ்தான் மாநில சிஐடி உளவுப் பிரிவினர் வழக்கமாகவே பாகிஸ்தான் உளவு துறை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும். அப்படிக் கண்காணிக்கும் போது தான் விஷால் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி விஷ்ணுகாந்த் குப்தா கூறுகையில், "சமூக வலைத்தளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெண் உளவாளியுடன் விஷால் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரியா சர்மா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அந்தப் பெண், முக்கியமான ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக அவருக்குப் பணம் கொடுத்துள்ளார்" என்றார்.
ஆன்லைன் விளையாட்டுகள்
விஷால் யாதவ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதில் அவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தை நடத்தவே முடியாத அளவுக்கு அவருக்குக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. பணத் தேவை அதிகரித்ததாலேயே அவர் இதுபோல பணத்தை வாங்கிக் கொண்டு உளவு பார்க்கத் தொடங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "அவர் கிரிப்டோகரன்சி மூலமாகவும் பணத்தைப் பெற்றுள்ளார். சில சமயம் நேரடியாக வங்கிக் கணக்குகள் மூலமாகவும் பணம் பெற்றுள்ளார். விஷால் யாதவிடம் தற்போது ஜெய்ப்பூரில் விசாரித்து வருகிறோம். மாநில போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
தீவிர விசாரணை
இந்த மோசடியில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது.. எவ்வளவு முக்கியமான தகவல்களை இந்த நபர் அனுப்பியுள்ளார் என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் எந்தளவுக்குத் தவறான காரியங்கள் நடக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் யாரேனும் தொடர்பு கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்களிடம் ஏமாறக்கூடாது என்றும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து உடனடியாக புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications