என்னங்க பண்றீங்க! பெண்களுக்கு எதிரான குற்றத்தில் டெல்லி டாப்! மத்திய அரசை சாடிய மஹுவா மொய்த்ரா
டெல்லி: இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் தான் அதிகளவில் குற்றங்கள் நடந்து வருகின்றன என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. இதனை குறிப்பிட்டு டெல்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 2021-2022 நிதியாண்டில் நடந்த குற்றங்கள் தொடர்பான விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் பெண்களுக்கு எதிரான குற்றம், தற்கொலை, விபத்து, வன்கொடுமை வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களின் விபரங்கள் மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகம்
இந்த தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டெல்லி உள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் டெல்லியில் தான் அதிகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதன்படி 20221-22ம் ஆண்டில் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. டெல்லியில் பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 3,948 கடத்தல் வழக்குகள், கணவரின் கொடுமை தொடர்பாக 4,674 வழக்குகள், 833 சிறுமிகள் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன.

40 சதவீதம் வரை அதிகம்
மேலும் கடந்த 2020ம் ஆண்டில் 9,782 குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில் 2021ல் குற்றங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மும்பை இரண்டாவது இடத்திலும், பெங்களூர் 3வது இடத்திலும் உள்ளது.

உள்துறை கட்டுப்பாட்டில் டெல்லி
இதில் மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களை அம்மாநில அரசின் போலீஸ் துறை நிர்வகித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் தவறிவிட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.

மஹுவா மொய்த்ரா கருத்து
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛2020ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக என்சிஆர்பியின் தகவல்கள் சொல்கின்றன. மேலும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியுள்ளது. டெல்லியில் சட்டம்-ஒழுங்கை மத்திய உள்துறை அமைச்சகம் தான் நிர்வகிக்கிறது. இதுதான் பாஜகவினர் நாரி சக்திக்கான விளக்கம்'' என கூறியுள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் மகளிர் தினத்தன்று ஆண்டுதோறும் நாரி சக்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. சாதனை படைத்த பெண்கள், பெண்களின் உரிமை, பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் நபர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் பாதுகாப்பில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக கூறினார். ஆனால் டெல்லி மற்றும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு அதனை கட்டுப்படுத்தாமல் பெண்கள் பாதுகாப்பு என வாய்மொழியில் கூறுவதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளதாகவும் மஹுவா மொய்த்ரா விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications