75 வருடங்கள் ஆகிவிட்டன.. ஜாதி இடஒதுக்கீட்டிற்கு ஒரு கால வரம்பு தேவை.. 3 நீதிபதிகள் சொன்னது என்ன?
டெல்லி: ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆகிவிட்டது. ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் பின்வருமாறு.

நீதிபதி பேலா திரிவேதி
நீதிபதி பேலா திரிவேதி தனது தீர்ப்பில்,
- பொருளாதார இடஒதுக்கீடு தவறானது, நியாயமற்றது என்று கூற முடியாது.
- ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆகிவிட்டது. ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
- பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தனி பிரிவாக கருதுவது நல்லதுதான். சமத்துவம் இல்லாத இடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவே இடஒதுக்கீடு.
- இந்த இடஒதுக்கீடு காரணமாக தனியாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற பிரிவு உருவாகிறது. அதனால் அதில் மற்ற ஜாதி பிரிவினரை சேர்க்க வேண்டும் என்று கூற முடியாது.

தனி பிரிவு
- பொருளாதார ரீதியாக உருவாக்கப்படும் பிரிவே தனி பிரிவுதான்.
- இதில் மற்ற ஜாதிகளை சேர்ப்பது அவசியமற்றது.
- சாதி ரீதியாக எங்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு என்று ஒரு கால கெடு இருக்க வேண்டும்.
- சாதி இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- இத்தனை ஆண்டுகளுக்கு பின் இடஒதுக்கீடு கிடையாத என்று காலக்கெடு விதிக்க வேண்டும், அவர் தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்து உள்ளார்.

நீதிபதி ஜே.பி.பர்திவாலா
நீதிபதி ஜே.பி.பர்திவாலா இதே தீர்ப்பை வழங்கி உள்ளார்.
- ஜாதி இடஒதுக்கீடு என்பது நீண்ட காலத்திற்கு நீடித்துக்கொண்டே இருக்க கூடாது. கால முழுமைக்கும் அந்த இடஒதுக்கீடு இருக்க கூடாது.
- பொருளாதார இடஒதுக்கீடு தவறானது, நியாயமற்றது என்று கூற முடியாது.
- ஆனால் இடஒதுக்கீடுதான் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடைசி இடம் என்றும் கூற முடியாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இதை பயன்படுத்த கூடாது.
- 10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை; இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை, என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி
நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனது தீர்ப்பில்
- மொத்தம் 3 விஷயங்களை நாம் இதில் ஆராய வேண்டும்.
- இந்த இடஒதுக்கீடு ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். சமத்துவத்திற்கு எதிராக இது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு மீறுகிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை.
- இதை வைத்து பார்க்கையில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனி தீர்ப்பு வழங்கி உள்ளார். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை.
- 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறுவது தவறில்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications