2024-25 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்கள் அதிரடி டிஸ்மிஸ்- 26 பேர் சஸ்பெண்ட்- 42 பேருக்கு தடை!
டெல்லி: 2024-25-ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டு எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்த 14 மாணவர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த 26 மருத்துவப் படிப்பு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
2024-25-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கும் காரணமாக இருந்தது. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகளும் முடக்கின.

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி பலரையும் கைது செய்திருந்தது. இந்த நிலையில் 2024-25-ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு மருத்துவபடிப்புகளில் சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 42 மாணவர்கள், 3 ஆண்டுகள் நீட் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட் தேர்வு முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த 26 மருத்துவ படிப்பு மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறும் நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் 9 பேர் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுகளில் ஆள் மாறாட்டம், பெருந்தொகையாக பணம் கொடுத்து வினாத்தாள்களை சட்டவிரோதமாக முன்கூட்டியே பெறுவது உள்ளிட்ட முறைகேடுகள் அதிகரித்துள்ளன. நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தும் மையங்களே இந்த நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதும் பெரும் அதிர்ச்சிக்குரியதாகும்.












Click it and Unblock the Notifications