நீட் தேர்வு விவகாரம்: ஜகா வாங்கிய NTA.. கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது ஏன்? பரபர பின்னணி
டெல்லி: நீட் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு நுழைவுத் தேர்வு நடத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பபட்டது. அதன் முடிவுகள், இம்மாதம் 14-ந் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், முன்கூட்டியே கடந்த 4-ந் தேதி வெளியானது. அதில், இதுவரை இல்லாதவகையில் 67 பேர் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் எடுத்தனர்.

நீட் சர்ச்சை: ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் எழுதிய 6 பேர், முழு மதிப்பெண் எடுத்தவர்களில் அடங்குவர். 1,500-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதால், அவர்களின் மதிப்பெண்கள் அதிகரித்தன. வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அடுத்தடுத்த இந்த சர்ச்சைகளால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலக்கம் அடைந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவை கடந்த 11 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் , தேசிய தேர்வு முகமை செய்ய வேண்டியது புனிதமான பணி. ஆனால், நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு பதில் தேவை’’ என்றனர். மறுதேர்வு கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேவேளையில், கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: இந்த நிலையில், கருணை மதிப்பெண்ணை எதிர்த்து இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட மேலும் சில மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு நுழைவுத் தேர்வு நடத்த தயார் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், தேர்வு எழுத விருப்பப்படாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதன் மூலம் கருணை மதிப்பெண்ணை அதிரடியாக ரத்து செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
கருணை மதிப்பெண் சர்ச்சை: 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடைபெற்றது. ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன. ஒருகேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகடிவ் மார்க் முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
அவ்வாறு கணக்கிடும்போது அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர் சரியாகவிடையளிக்கும்போது 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரே ஒருகேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
719, 718 மதிப்பெண்கள் எப்படி?: அதன்படி பார்த்தால் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் வீணாகும் பட்சத்தில் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த அடிப்படையில்தான், சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது” என்று கூறியது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியுள்ள தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்களை ரத்து செய்து இருக்கிறது.
23 ஆம் தேதி மறு தேர்வு: 1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் எனவும் 30-ந்தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த மறு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்றும் மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற பழைய மதிப்பெண்ணே தொடரும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறு தேர்வு நடத்த உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications