நீட் ரத்தானால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை- நாளை விசாரணை!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தேசியத் தேர்வு முகமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு பெரும் சர்ச்சையானது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே விற்பனை, கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டது, 67 பேருக்கு முழுமையாக மதிப்பெண்களை கொடுத்தது, ஆள் மாறாட்டம் என அடுக்கடுக்கான முறைகேடுகள் அம்பலமாகின. பலரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல நீட் தேர்வில் எழுதவே கூடாது என பல மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோல நீட் முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டார். நீட்டை தொடர்ந்து நெட் உள்ளிட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
நீட் தேர்வுகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கடுமை காட்டினர். இந்த வழக்குகள் மீது நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நடத்திய இந்த விசாரணையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதாவது 67 மாணவர்களுக்கு ஏன் முழுமையான மதிப்பெண்கள் தரப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டில் தேர்வு எழுதுவோருக்கும் நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்பட்டது? நீட் வினாத்தள் எங்கு எப்போது அச்சாகிறது? நீட் தேர்வுக்கான வினாத்தாள் எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் கேள்விகள் எழுப்பி இதற்கான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த வழக்கில் நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தும் தேசியத் தேர்வு முகமை இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வை ரத்து செய்தால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்படைவர்; இது அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி என தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் நீட் தேர்வு வினாத்தாளை வல்லுநர் குழு தயாரிக்கிறது; நீட் தேர்வு தொடர்பாக 63 புகார்கள் பெறப்பட்டு 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தேசியத் தேர்வு முகமை பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications