"ரொம்ப நன்றிங்க.." பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா! இதுதான் காரணம்
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டினரையும் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியா உதவுகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய போர் 3ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தப் போர் தொடர்ந்து 16ஆவது நாளாக நீட்டிக்கும் நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையிலும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிய இந்தியர்கள்
இந்தப் போர் காரணமாக உக்ரைன் வான்வழியில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர் குறிப்பாகப் போர் தொடங்கிய சமயத்தில் மட்டும் அங்கு சுமார் மாணவர்கள் உட்பட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்ததாகத் தகவல் வெளியானது. விமானச் சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர்களால் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆப்ரேஷன் கங்கா
இதையடுத்து அவர்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால், அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி நாடுகளுக்குத் தரைவழியாக வந்து, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். இதற்காக ஆப்ரேஷன் கங்கா என்ற சிறப்புத் திட்டத்தையும் வெளியுறவுத் துறை முன்னெடுத்தது. மத்திய அரசின் இந்தத் தொடர் முயற்சியால் இந்தியர்கள் அனைவரும் விரைவாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள்
இந்த ஆப்ரேஷன் கங்காவில் இந்தியர்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இங்கிருந்து அவர்கள் தங்கள் தாயகம் சென்றனர். அதன்படி சமீபத்தில் நேபாளம் நாட்டை சேர்ந்த 4 பேர் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா அழைத்த வரப்பட்டனர். இதற்காகப் பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் நேபாளம் நாட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பிரதமருக்கு நன்றி
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தனது ட்விட்டரில், "நேபாள நாட்டை சேர்ந்த 4 பேர் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு வந்துள்ளனர். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் நேபாள நாட்டினரைத் தாயகம் திரும்ப உதவிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி" ட்வீட் செய்துள்ளார். முன்னதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேரைத் தாயகம் அழைத்து வந்ததற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications