கணவர் முன்பு பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்கள்! ரத்த களரியில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்! அடிதடி
டெல்லி: நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே நடந்து முடிந்தது. ஆனால், ஒரு குடியிருப்பில் அத்துமீறிய இளைஞர்களால் பெரிய அடிதடி நடந்துவிட்டது. இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
2022 நிறைவடைந்து இன்று புத்தாண்டு பிறந்ததை உலகெங்கும் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லை.
ஆனால், வேக்சின் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் இந்தாண்டு புத்தாண்டு நாடு முழுக்க மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அமைதியாகவே புத்தாண்டு கொண்டாட்டம் இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை கூட அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் மற்ற இடங்களில் சில பரபர சூழல்கள் உருவானது. குறிப்பாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பதற்றம்
அதேபோல தேசிய தலைநகர் பகுதியில் உட்பட நொய்டாவிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அங்கு கவுர் சிட்டி ஃபர்ஸ்ட் அவென்யூ சொசைட்டியில் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெளிநபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி செல்பி எடுக்க எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அத்துமீறிய இளைஞர்கள்
அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது நண்பர்களைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். அதன்படி அவர்களும் புத்தாண்டிற்கு வந்துள்ளனர். அங்குக் கொண்டாட்டத்தில் அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த இரண்டு பெண்களுடன் அவர்கள் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண்கள் மறுத்த போதும் தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அடிதடி
இது அப்படியே கைகலப்பாக மாறியது. அந்த பெண்களின் கணவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் கணவர்களைத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த குடியிருப்பு சங்கத்தினரும் மற்றவர்களும் மோதலை தடுக்க சென்றனர். இருப்பினும், வாக்குவாதம் தொடரவே அவர்களும் சண்டையிடத் தொடங்கினர். இதில் ஒருவருக்குத் தோள்பட்டையில் எலும்பு உடைந்துள்ளது. சண்டையை விலக்க முயன்ற பாதுகாவலர்களும் இதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருவர் கைது
பெரிய போராட்டத்திற்கு பிறகே சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும், மற்ற குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications