ஒரே ஒரு போட்டோ போட்டா போதும்.. ரூ.1000 தரும் NHAI! நெடுஞ்சாலை பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..!
டெல்லி: தேசிய நெடுஞ்சாலை பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சுத்தமற்ற அல்லது அழுக்கான கழிப்பறைகளை புகைப்படமாக எடுத்து அனுப்பும் பொதுமக்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பரிசை டோல் கட்டணமாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தற்போது நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிக்க தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

டோல் கட்டணத்தின் ஒரு பகுதியை சாலை பராமரிப்பிற்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் செய்யப்படுகின்றன.
நெடுஞ்சாலை சுத்தம்
மேலும் குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் கழிவறைகளும் டோல் பூத் நிர்வாகங்கள் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். பணம் செலுத்தி சாலைகளில் பயணிக்கும் போது சுகாதாரமற்ற கழிப்பறைகளால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்திப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைகளில் சுத்தமற்ற அல்லது அழுக்கான கழிப்பறைகளை புகைப்படமாக எடுத்து அனுப்பும் பொதுமக்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்எச்ஏஐ பரிசு திட்டம்
இந்த விசித்திரமான ஆனால் பயனுள்ள முயற்சிக்கு 'Clean Toilet Picture Challenge' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 31ஆம் தேதி வரை நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் (NH) நடைபெறுகிறது.
இந்த சவாலை மூலம், சுத்தமான கழிப்பறைகளை உறுதி செய்வதில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க தான் NHAI திட்டமிட்டுள்ளது. பயணிகள் தாங்கள் பயணிக்கும் நெடுஞ்சாலையில் காணப்படும் அழுக்கான கழிப்பறையின் ஜியோ-டாக் செய்யப்பட்ட புகைப்படத்தை "RajmargYatra" என்ற ஆப்பில் பதிவேற்ற வேண்டும்.
கழிப்பறை புகைப்படம்
அதனுடன் பயணியின் பெயர், இடம், வாகன பதிவு எண் (Vehicle Registration Number) மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் உள்ளிடவேண்டும். அந்த புகைப்படம் சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்த வாகன எண்ணுடன் இணைக்கப்பட்ட FASTag கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு வாகன எண்ணும் ஒரே முறை மட்டுமே பரிசு பெற தகுதி உடையது. பணமாக அல்லாமல், இது முழுவதும் FASTag ரீசார்ஜ் வடிவில் மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டம் NHAI கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகள் (toll plazas, wayside amenities) மட்டுமே பொருந்தும். பிற தனியார் எரிபொருள் நிலையங்கள், உணவகங்கள் (தபா) போன்ற இடங்களில் உள்ள கழிப்பறைகள் இதில் சேர்க்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்மார்க் யாத்ரா ஆப்
அதே கழிப்பறைக்கான புகைப்படம் ஒரே நாளில் பலர் அனுப்பினால், முதலில் அனுப்பட்ட சரியான புகைப்படம் மட்டுமே பரிசுக்கு தகுதி பெறும். மேலும், புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா என்பதை நேரம் மற்றும் இடம் ஆகியவை குறித்து AI மற்றும் மனித சரிபார்ப்பு மூலம் NHAI உறுதி செய்யும். இந்த முயற்சி, மத்திய அரசின் "Special Campaign 5.0" திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம், நெடுஞ்சாலைகளின் சுத்தம், சாலை அழகாக்கம், கழிப்பறை பராமரிப்பு, சாலை பாதுகாப்பு சைகைகள் போன்றவற்றை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன், NHAI இந்திய நெடுஞ்சாலைகளில் சுத்தம், பாதுகாப்பு, மற்றும் பயண அனுபவத்தை உயர்த்த முயற்சி செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications