பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்கள்- உ.பி. உட்பட 8 மாநிலங்களில் 72 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு
வட இந்தியாவில் 72 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து வட இந்திய நிழல் உலக தாதாக்களுக்கு கடத்தி வரப்பட்ட பயங்கர ஆயுதங்கள் தொடர்பாக உத்தரப்பிரதேசம் உட்பட 8 மாநிலங்களில் 72 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA-என்.ஐ.ஏ.) இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியில் மொத்தம் 72 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் நகரத்தில் வீடு ஒன்றை இலக்கு வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து இந்தியாவுக்குள் சப்ளை செய்யக் கூடிய நிழல் உலக தாதாவின் வீடு இது என்கின்றனர் அதிகாரிகள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையின் போது பல இடங்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த ஆயுதங்களையே பயன்படுத்துகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்த நிழல் உலக தாதாக்கள் மீது கொலை, கள்ள நோட்டு கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே பதியப்பட்டுள்ளனவாம்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோல 5 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். அப்போதும் பெரும் எண்ணிக்கையிலான சட்ட விரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிழல் உலக தாதாக்களுக்கும் பல்வேறு மதவாத பயங்கரவாதிகளுக்குமான தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications