Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலுக்கான டிரெய்லர்- 2023-ல் 9 மாநில தேர்தல்கள்- அரசியல் களத்தில் அனலுக்கு பஞ்சமில்லை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2023-ம் ஆண்டு நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு அக்னி பரீட்சை காலமாக இருக்கப் போகிறது. 2023-ம் ஆண்டு 9 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 9 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் களப் பணிகளில் தீவிரம் காட்டுகின்றன.

2023-ம் ஆண்டு தொடக்கம் முதலே அரசியல் களம் அனல் பறக்க காத்திருக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் (உத்தேசமாக பிப்ரவரி) நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன. கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கர்நாடகா தேர்தலின் போதே தெலுங்கானா சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டின் இறுதியில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல்.

Nine States Assembly Elections in 2023 to impact Loksabha Elections

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் வடகிழக்கு மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் உயிர்பிழைத்து எழுமா? என்கிற கேள்விதான் இருக்கிறது. மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்மாநிலங்களில் பிரதான அரசியல் கட்சியாக ஒருகாலத்தில் காங்கிரஸ் இருந்தது. இப்போது இருக்கிற இடம்தெரியாமல் காங்கிரஸ் உருக்குலைக்கப்பட்டுவிட்டது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவிலும் மாநில கட்சிகளிலும் கரைந்து போய்விட்டனர். இதனால் மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரிபுராவில் பாஜகவுக்கு சம போட்டியாக இடதுசாரிகள் களத்தில் உள்ளனர். திரிபுராவில் ஆளும் பாஜகவின் உட்கட்சி பூசல், தேர்தல் முடிவுகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வென்ற போதும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற முடியாத நிலையில்தான் பாஜக இருந்தது. பின்னர் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துதான் பாஜக ஆட்சியை பிடித்தது. இம்முறையும் பாஜக எளிதாக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றுதான் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியைத் தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஜேடிஎஸ் கட்சியும் தாமே கிங் மேக்கர் என்பதை நிரூபிக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது. இப்போதே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளில் ஜரூராக இறங்கிவிட்டது. அதே நேரத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கின்றன. உட்கட்சி பூசலும் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் கர்நாடகா தேர்தல் களத்தில் உச்சகட்ட அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலின் போதே தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பரிந்துரைக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. கர்நாடகா தேர்தலிலும் இம்முறை சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி கால் பதிக்கிறது. கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சியுடன் பிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா தேர்தல் நடைபெறாமல் போனால் ஆண்டின் பிற்பகுதிய்ல் அம்மாநில தேர்தல் நடக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு வலிமையான போட்டி கட்சிகள் இப்போதைக்கு இல்லை. காங்கிரஸும் பாஜகவும் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்துவிட வேண்டும் என்பதில் முட்டி மோதுகின்றன.

2023-ல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிற ராஜஸ்தான், மபி, சத்தீஸ்கர் மூன்றும் காங்கிரஸ்- பாஜக நேரடியான போட்டியில் இருக்கும் மாநிலங்கள். ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் பாஜக வழக்கமான அரசியல் சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றி காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கபளீகரம் செய்து கொண்டது. ஆட்சியையும் செல்வாக்கையும் தக்க இம்மாநிலங்களில் காங்கிரஸ் முழு பலத்துடன் களமிறங்கியாக வேண்டும். காங்கிரஸை காலி செய்தாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக களமாடும். மிசோரமைப் பொறுத்தவரையில் மாநில கட்சிகள்தான் அங்கு வெற்றியாளர்கள்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் முதல் சட்டசபை தேர்தல். ஜம்மு காஷ்மீர் மாநிலமாக, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்துடன் இருந்தது. ஆனால் இந்த 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையே 2 யூனியன் பிரதேசங்களாகக் கூறு போட்டது. இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரிவினை உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக இத்தேர்தல் பார்க்கப்படும். இதனால் 2023-ம் ஆண்டின் தொடக்கம் முதல் இறுதி வரை சட்டசபை தேர்தல்களால் மாநிலங்களின் அரசியல் களமும் தேசிய அரசியல் களமும் படுசூடாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+