வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமை இனி இல்லை.. வெளியான தளர்வுகள்!
டெல்லி: கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான 7 நாள் வீட்டு தனிமையை பிப்.,14 முதல் ரத்து செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வந்தது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. ரிஸ்க் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு இந்தியா வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

முந்தைய கட்டுப்பாடுகள்
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் ஆன்லைனில் ‛ஏர்சுவிதா' இணையதளத்தில் பதிவு செய்வதோடு, 14 நாளுக்கான பயண விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் 72 மணிநேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்று, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான தடுப்பூசியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் 7 நாள் வீட்டு தனிமையில் இருப்பதோடு, கொரோனா அறிகுறிகள் இருப்பின் கூடுதலாக 14 நாட்கள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

பிப்.,14 முதல் தளர்வு
இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் சிரமப்பட்டனர். தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தளர்வுகள் காதலர் தினமாக பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வருகிறது.

தளர்வு என்ன
அதன்படி ரிஸ்க் நாடுகள் பட்டியல் இனி நடைமுறையில் இருக்காது. பயணிகள் 7 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டாம். ஆனால் 14 நாள் சுயகண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு பதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை பதிவேற்றினால் போதுமானது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
கனடா, ஹாங்ஹாங், அமெரிக்கா, இங்கிலாந்து, பக்ரைன், கத்தார், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 82 நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தப்படி கொரோனா சான்று பதிவேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications