10 ஆண்டாய் ஒரு எம்பி கூட இல்லை.. 2 மாநிலத்தில் எல்லா இடத்திலும் பாஜகவிடம் தோற்ற காங்கிரஸ்! பரிதாபம்
டெல்லி: கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் 2 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலிலும் இந்த மாநிலங்களில் மீண்டும் பாஜக தனது ஆதிக்கத்தை தொடர விரும்பும்
லோக்சபா தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவின் வெற்றியை தடுக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக காங்கிரஸ், திமுக, தேசிவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட 25 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்நிலையில் தான் கடந்த 10 ஆண்டுகளில் முக்கியமான 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இந்த 2 மாநிலங்களிலும் சில இடங்களை வெல்வது அவசியம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014, 2019 தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகள் தான் கிடைத்துள்ளது. இதனால் இந்த முறை அந்த மாநிலங்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயன்று வரும் சூழலில் பாஜக தனது ஆதிக்கத்தை தொடர விரும்புகிறது.
இதில் முதல் மாநிலம் எதுவென்றால் ராஜஸ்தான். இந்த மாநிலத்தில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில் பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு இங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த நிலையிலும் கூட அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இத்தகைய சூழலில் தான் மீண்டும் அங்கு 2 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் ஏப்ரல் 19 முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ல் 2வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பாஜக 115 இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியை பிடித்தது. வெறும் 70 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதனால் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் பாஜக 25 இடங்களிலும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.
அதேபோல் லோக்சபா தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் மாநிலம் குஜராத். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான இங்கு மொத்தம் 26 லோக்சபா தொகதிகள் உள்ளன. கடந்த 2014, 2019 ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில் இங்கு காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வரும் தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து களமிறங்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் குஜராத்தில் எப்படியாவது எம்பியை பதவியை பெற்று விட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால் குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல என அரசியல் நோக்கர்கள். அதாவது குஜராத்தில் பாஜகவின் கட்டமைப்பு என்பது காங்கிரஸை விட பலமாக உள்ளது. மேலும் சொந்த மாநிலம் என்பதால் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு குஜராத் அரசியல் பற்றிய புரிதலில் மாஸ்டராக உள்ளனர். இதை தாண்டி காங்கிரஸ் வெல்வது சவாலானது தான். ஆனால் அரசியல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ் நம்பிக்கையுடன் குஜராத் லோக்சபா தேர்தலை எதிர்கொள்கிறது. குஜராத்துக்கு ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மே 17 ம் தேதி ஒரே கட்டமாக அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications