ஓய்ந்தது 12 வருட புயல்! நீரா ராடியா ஆடியோக்களில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை.. சிபிஐ!
டெல்லி: நீரா ராடியாவின் போன் உரையாடல்களில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 8,000 ஆடியோ பதிவுகளில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 12 வருடமாக இந்திய அரசியலில் புயலை கிளப்பிய நீரா ராடியா உரையாடலில் குற்றம் சாட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒன்றுமே இல்லை என்று சிபிஐ விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார லாபியிஸ்ட், புரோக்கர் நீரா ராடியாவின் ஆடியோக்கள் 2010ல் பொதுவில் வெளியானது. இந்த போன் ரெக்கார்டிங் ஆடியோக்கள் இந்திய அரசியலையே உலுக்கியது. நீரா ராடியா போனில் பல தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுடன் பேசுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
முக்கியமாக அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவுடனும், பல செய்தியாளர்களுடனும், ரத்தன் டாடாவுடனும் நீரா ராடியா பல பிஸ்னஸ்களை முடிப்பதற்காக டீலிங் பேசியதாக புகார் வைக்கப்பட்டது. இதற்காக அவர் மேற்கொண்ட போன் உரையாடல்கள் லீக் செய்யப்பட்டன.

லீக்கான உரையாடல்
இந்த போன் உரையாடல்கள் வருமான வரித்துறை மூலம் டேப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. Vaishnavi Communications நிறுவனத்தை அப்போது நீரா ராடியா நடத்தி வந்தார். இந்த நிறுவனம் பல அரசியல் லாபி பணிகளில் ஈடுபட்டு, சட்ட விரோதமாக டீலிங்குகளை முடித்ததாகவும், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாகவும் சந்தேகம் எழுந்த நிலையில்தான் நீரா ராடியாவின் போன் உள்துறை அமைச்சக அனுமதியுடன் வருமான வரித்துறை மூலம் வேவு பார்க்கப்பட்டது. இதில் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோக்கள் 2010ல் ஊடகங்களில் வெளியானது.

ரெக்கார்ட்
இதில் 2ஜி ஏலத்தில் சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை விற்பனை செய்ய வேண்டும் என்று நீரா ராடியா கேட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. 2ஜி வழக்கு சமயத்தில் நீரா ராடியா உரையாடல்கள் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியது. சில நிறுவனங்களுக்கு இந்த அலைக்கற்றையை கொடுக்க வேண்டும் என்பதற்காக நீரா ராடியா ஆ. ராசாவிடம் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதேபோல் 2ஜி விவகாரம் தொடர்பாக நீரா ராடியா சில செய்தியாளர்களிடம் போனில் பேசியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நீரா ராடியா
எம்பி கனிமொழி, ரத்தன் டாட்டா, அருண் ஜெட்லி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பெயர்கள் கூட இந்த உரையாடலில் அடிபட்டன. தயாநிதி மாறனை மீண்டும் மத்திய ஐடி அமைச்சராக்கியதற்கு எதிராகவும் நீரா ராடியா பேசியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் நீரா ராடியாவின் 8000க்கும் அதிகமான போன் உரையாடல்களை சிபிஐ இத்தனை காலமாக ஆய்வு செய்து வந்தது. 14 கட்டமாக இந்த விசாரணையை சிபிஐ கடந்த 12 வருடங்களாக நடந்தி வந்தது.

எதுவும் இல்லை
இந்த நிலையில் நீரா ராடியாவின் போன் உரையாடல்களில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 8,000 ஆடியோ பதிவுகளில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் மூலம் நீரா ராடியாவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது. 12 வருடமாக இந்திய அரசியலில் புயலை கிளப்பிய நீரா ராடியா உரையாடலில் குற்றம் சாட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒன்றுமே இல்லை என்று சிபிஐ விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிரபராதி
2ஜி வழக்கில் ஆ. ராசா நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது நீரா ராடியாவும் தவறு செய்யவில்லை என்று சிபிஐ தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்த 2017ம் வருடம் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை. தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

2ஜி வழக்கு
அதோடு ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு பல முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்த நிலையில் இதில் தனியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது நீரா ராடியாவின் போன் உரையாடல்களில் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நீரா ராடியா - ரத்தன் டாடா உரையாடல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்தான் சிபிஐ இப்படி எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications