அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
டெல்லி: அதிமுகவின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி) இருதரப்பும் இணைந்து சென்னையில் ஜூன் 22-ந் தேதி பொதுக்குழுவைக் கூட்டினர். இந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் பங்கேற்றனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட பொதுக்குழுவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்; அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவு
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய இந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். மேலும் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் நீடிக்கும் எனவும் தீர்ப்பளித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் தீர்ப்பு
இத்தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி , சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 2-ந் தேதி தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதை உறுதி செய்தது இந்தத் தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அம்மனுவில், ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் தமது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அப்பீல்
தற்போது உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக நிலையில் ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தமது மேல்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications