இரட்டை இலைக்கு சிக்கலா? எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் டெல்லி ஹைகோர்ட் இன்று உத்தரவு
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி வசம் சென்றது உறுதியானது. எனினும், எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அணையத்திற்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இன்று டெல்லி கோர்ட் உத்தரவு: இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது" என வாதிட்டார்.
இதையடுத்து, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகழேந்தி அதிமுகவின் உறுப்பினரே கிடையாது. புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவர் உரிமை கோர முடியாது என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர் நீதிமன்றம், இன்று உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு?: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இன்று பிறப்பிக்கப்படும் உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவிற்கு தொடர்பு இல்லாதவர்கள் தொடர்ந்த வழக்கு என்பதால், நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு அளிக்கும் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். எனினும், லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள ஓ பன்னீர் செல்வம், கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications