உணவு டெலிவரி நிறுவன பெயரில்.. 1 ப்ளஸ் 1 ஆஃபர்.. வங்கி அதிகாரியிடமே கம்பி நீட்டிய மோசடி கும்பல்!
டெல்லி: இணையம் வழியாக நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள்தான் இந்த மோசடியில் சிக்குகிறார்கள் என்று இல்லை நன்கு விவரம் அறிந்தவர்கள் கூட சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் டெல்லியில் ஒரு மொசடி நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மக்களிடையே இணையம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் போன்களும் கிட்டத்தட்ட அனைவரது கைகளிலும் தவழ்கிறது. பண பரிமாற்றம் செய்வதில் தொடங்கி, உணவு ஆர்டர் போடுவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது என அனைத்தையும் செல்போன் செயலிகள் மூலமாகவே செய்து விடுகிறோம்.

இப்படி மக்கள் மத்தியில் இணைய வழி பயன்பாடு அதிகரித்து விட்ட இந்த சூழலில் மோசடி கும்பல்களும் இணையத்தில் பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக வங்கியில் இருந்து பேசுகிறோம் என சொல்லிக்கொண்டு ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது..அதை புதுப்பிக்க உங்களின் கார்டில் உள்ள நம்பரை கேட்டு வாங்கி மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
நூதன முறையில் மோசடி: மேலும், ஆதார் கார்டு அப்டேட் செய்வதாக கூறி ஓடிபி எண்ணை வாங்கி வங்கியில் இருந்து பணத்தை மொத்தமாக சுருட்டுவது என புதுப் புது வழிகளை கையாண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகம் படிக்காத போதிய விழிப்புணர்வு இல்லாத நபர்களிடம் தான் இந்த மோசடிகள் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. நன்கு படித்த உயர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் கூட இத்தகைய மோசடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இதை உணர்த்தும் வகையில் தான் டெல்லியில் ஒரு மோசடியை அரங்கேறியிருக்கிறது ஒரு மோசடி கும்பல். இந்த மோசடி கும்பலின் வலையில் வங்கியில் பணியாற்றும் நபரே சிக்கி பணத்தை பறிகொடுத்து இருத்து தற்போது கையை பிசைந்து கொண்டு இருக்கிறார். அது குறித்த விவரங்களை பார்க்கலாம்
ஆன்லைனில் பலரும் தற்போது உணவு ஆர்டர் போட்டு சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆன்லைனில் ஆர்டர் போட்டு உணவை சாப்பிடும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு ஆஃபர்களையும் அள்ளி வீசுகின்றன இந்த நிறுவனங்கள். இதே முறையை கையாண்டு தற்போது டெல்லியில் மோசடியை ஒரு கும்பல் அரங்கேற்றியிருக்கிறது.
ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ: அதாவது, டெல்லியை சேர்ந்த வங்கி அதிகாரியான சபீதா சர்மா (வயது 40) செல்போன் எண்ணிற்கு ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்ற இலவச ஆஃபரை கொடுப்பதாக உணவு நிறுவன பெயரில் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்துள்ளது. இதைப்பார்த வங்கி அதிகாரியும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். முதலில் அவருக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
சில நிமிடங்களில் அவருக்கு அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், இந்த ஆஃபரை பெற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். பிரபல உணவு நிறுவனத்தின் பெயரில் இருந்ததால் அவருக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. அவர்கள் கூறியபடி ஒன்றன் பின் ஒன்றாக என அனைத்தையும் செய்து இருக்கிறார். அவ்வளவுதான் அடுத்த சில நொடிகளில் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அடுத்தடுத்து மெசேஜ் வந்துள்ளது. இதனால், ஒரு நிமிடம் அந்த வங்கி அதிகாரி அதிர்ந்து போனார். இதையடுத்து உஷார் ஆன சபீதா உடனடியாக தனது கிரெடிட் கார்டை முடக்கிவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications