வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இனி சிலிண்டர் எரிவாயு எடை 14.2 கிலோ என்று இருப்பதற்கு பதிலாக 10 கிலோவாக மாறப்போகிறது என்றும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும் சமூக ஊடகங்களில் சிலர் செய்திகளை பரப்பி வருகிறார்கள். முன்னணி ஊடகவியலாளர்களே இதனை செய்து வருகிறார்கள். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு குறித்த தேவையற்ற பயம் வேண்டாம் என்றும், மாற்று எரிசக்தி மற்றும் இறக்குமதியைச் சீர்செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறியுள்ளார்.

10 கிலோ சிலிண்டர் குறித்த வதந்திக்கு மறுப்பு
ஈரான் போர் காரணமாக இறக்குமதி குறைந்துள்ளதால், தட்டுப்பாட்டைச் சமாளிக்க 14.2 கிலோ சிலிண்டர்களுக்குப் பதில் 10 கிலோ எரிவாயு மட்டுமே நிரப்பி விநியோகிக்கப்பட உள்ளதாக பரவிய செய்திகளை சுஜாதா சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது போன்ற செய்திகள் வெறும் ஊகங்களே, பொதுமக்கள் இவற்றை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய கவனம் விநியோகத்தைச் சீர்செய்வதிலும், சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதிலும் மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பிஎன்ஜி இணைப்புகள் அதிகரிப்பு
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 3.5 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது எல்பிஜி (LPG) மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும். எரிவாயு விநியோகத்தில் சவால்கள் இருந்தாலும், விநியோகஸ்தர்களிடம் கையிருப்பு தீர்ந்துவிடும் நிலை ஏற்படவில்லை. பீதியினால் மக்கள் முன்கூட்டியே சிலிண்டர் முன்பதிவு செய்வது இப்போது குறைந்துள்ளது. சிலிண்டர் டெலிவரி தற்போது இயல்பாகவே நடக்கிறது.
வணிக எரிவாயு ஒதுக்கீடு
வணிக ரீதியிலான எல்பிஜி அளவில் 50 சதவீதம் இனி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். உணவகங்கள், தாபாக்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலை உணவகங்கள், பால் பண்ணைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை 20 மாநிலங்கள் இந்த ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சுமார் 15,800 டன் எரிவாயுவைப் பயன்படுத்தி உள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்கள்
போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந் வழியாக இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள் பத்திரமாகப் பயணித்து வருகின்றன. பைன் கேஸ் (Pine Gas) மற்றும் ஜக் வசந்த் (Jag Vasant) ஆகிய இந்த இரண்டு கப்பல்களும் சுமார் 92,000 டன் எரிவாயுவை ஏற்றி வருகின்றன (இது இந்தியாவின் ஒரு நாள் நுகர்வுக்குச் சமம்). இவை அடுத்த இரண்டு நாட்களில் இந்தியக் கரையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 'எம்.டி ஷிவாலிக்' மற்றும் 'எம்.டி நந்தா தேவி' ஆகிய கப்பல்கள் பத்திரமாக இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications