ஈரானில் இருந்து பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்ட 290 இந்தியர்கள்.. டெல்லி வந்ததுமே நெகிழ்ச்சி
டெல்லி: ஈரானில் இருந்து 290 இந்தியர்களை அழைத்து வந்த 'ஆபரேஷன் சிந்து' விமானம் டெல்லியை வந்தடைந்தது. டெல்லி விமான நிலையத்தை விமானம் வந்தடைந்ததும் 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' மற்றும் 'பாரத் மாதா கீ ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பி, தங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்ததற்காக இந்திய அரசுக்கு உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தனர்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இருப்பதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ந் தேதி ஈரான் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் தாக்குதலை தொடங்கியது. எந்த முன்னறிவிப்பும் இன்றி இருநாடுகளுமே போரில் குதித்ததால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரான் இஸ்ரேல் இருநாடுகளுமே
ஏவுகணை, டிரோன் என பலவகை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே 9 வது நாளாக இன்றும் போர் நடந்து வருகிறது.

இந்த போர்ச்சூழலில் இரு நாடுகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கு படிப்புக்காகவும், வேலைக்காகவும் சென்ற இந்தியர்கள் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்களை பத்திரமாக மீட்டு வருவதில் இந்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது.
இதன்படி இந்திய அரசு, ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக அழைத்து வர முடிவு செய்தது. இதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை ஈரான் வடக்கு பகுதியில் உள்ள உர்மியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்பு கொண்டனர். இதனைத்தொடர்ந்து அந்த மாணவர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது
இதன்படி ஈரான் நாட்டின் அருகில் உள்ள அர்மேனியா நாட்டுக்கு அந்த மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்கு துர்க்மெனிஸ்தான் நாடும் உதவி செய்தது. இப்படி 110 மாணவர்கள் முதல்கட்டமாக அர்மேனியா அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு எரேவன் என்ற இடத்தில் உள்ள ஸ்வார்நாட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
இந்த விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு காலை 6.30 மணி அளவில் டெல்லியில் வந்து இறங்கியது. இந்த குழுவில் 94 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியானது. அவர்களை இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார். பின்னர் மாணவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர். பின்னர் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே முதலில் வந்த குழுவினை போல் மற்ற இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அர்மேனியா நாட்டுக்கு வருவதில் சிக்கல் இருந்தது. ஈரானில் இருந்து 1000 இந்திய மாணவர்கள் வெளியேற விரும்புகிறார்கள். அவர்களுக்காக இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது.
ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். தற்போது ஒரு விமானத்தில் மொத்தமாக 290 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த விமானம் டெல்லியில் இரவு 11.30 மணி அளவில் வந்திறங்கியது. இந்தியா வந்த உடன் அவர்கள் 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' மற்றும் 'பாரத் மாதா கீ ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பி, தங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்ததற்காக இந்திய அரசுக்கு உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications