பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா.. ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? மன் கி பாத்தில் மோடி பெருமை
டெல்லி: பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. சண்டையை நிறுத்த கெஞ்சியதை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது மாறி வரும் இந்தியாவை காட்டுகிறது. அனைவரிடமும் தேசபக்தி உணர்வுகள் நிறைந்துள்ளன. நம் படை வீரர்களின் துல்லிய தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்று இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். பஹல்காமில் இருந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மே 7ல் நம் நாடு தொடங்கியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என்று அவர்களின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த 7 ம் தேதி நள்ளிரவில் 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. குல்பூர் கேம்ப் என்பது லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமானது. இவர்கள் ஜம்மு காஷ்மீரில் ராஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் சதிவேலைகளை செய்கின்றனர். அதேபோல் அப்பாஸ் கேம்ப் என்பது லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப்படை தாக்குதலுக்கான பயிற்சி முகாமாகும். பார்னாலா கேம்ப் என்பது ஆயுத பயிற்சி அளிக்கும் இடமாகும். நம் நாட்டின் இந்த தாக்குதலில் கதிகலங்கிய பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு கெஞ்சியது. இதையடுத்து கடந்த 10ம் தேதி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி தனது முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் என்பது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளதற்கான ஆதாரமாக உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக மொத்த நாடும் ஒன்றிணைந்துள்ளது. பயங்கரவாதத்தை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறது. நம் படை வீரர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி துடைத்தெறிந்துள்ளனர். சிந்தூர் நடவடிக்கை (ஆபரேஷன் சிந்தூர்) மாறிவரும் இந்தியாவை காட்டுகிறது. அனைவரிடமும் தேசபக்தி உணர்வுகள் நிறைந்துள்ளன.
சிந்தூர் நடவடிக்கை என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. இது நம் உறுதி, தைரியம், மாற்றமடைந்து வரும் இந்தியாவை எடுத்துக்காட்டும் படமாகும். இது நாடு முழுவதும் நாட்டிலும் தேசபக்தி உணர்வை ஊட்டியுள்ளது. பல இடங்களில் தேசியக்கொடியுடன் வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தேசியக்கொடி பேரணி நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக்கொடியை ஏந்தி நம் நாட்டின் ஆயுத படைகளுக்கு மரியாதை செலுத்தினர்
நாட்டில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு சிந்தூர் என்று பெயர் வைக்கப்படுகிறது. இப்போது குழந்தைகளுக்கான பொம்மைகளில் மேட் இன் இந்தியாவா என்று பார்த்து பலரும் வாங்க தொடங்கி உள்ளனர். பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு பதில் இந்தியாவிலேயே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. நாட்டு பற்றையும் உள்ளடக்கியது தான்.
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ‛சிந்தூர்' நடவடிக்கை புதிய நம்பிக்கையையும் சக்தியையும் புகுத்தியுள்ளது. மொத்த உலக நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக திரும்பி உள்ளது. சிந்தூர் நடவடிக்கை நமது உறுதிப்பாடு, தைரியம் மற்றும் மாறிவரும் இந்தியாவுக்கான சான்றாகும். பாதுகாப்பு துறையில் நம் உள்நாட்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க உதவின. அதேபோல் நம் வீரர்களின் துணிச்சல் மற்றும் துல்லியமான செயல்பாடு இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க காரணமாகி உள்ளது'' என்று பெருமையாக கூறினார்.












Click it and Unblock the Notifications