பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு- நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முதல்வர்கள் அதிரடி முடிவு!
டெல்லி: மத்திய பட்ஜெட் 2024-க்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்ததால் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை தாம் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வழக்கமான மத்திய பட்ஜெட்டாக, அனைத்து மாநிலங்களுக்கும் பரவலான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த பட்ஜெட் இருந்தது. அத்துடன் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி மற்றும் பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பட்ஜெட்டின் இந்தப் புறக்கணிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. அதனால்தான் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என அறிவித்தார்.
மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதி தான் அதிகம் உள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் திட்டங்களை கொண்டு வருவதே ஒரு சிறந்த அரசு ஆகும். அப்படிதான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டை பார்த்தாவது ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தமது எக்ஸ் பக்கத்தில், மத்திய பட்ஜெட் மிகவும் பேராபத்தானது. மத்திய அரசு கடைபிடிக்க வேண்டிய கூட்டாட்சிக்கு எதிரானது. இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ந் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள். மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கத்தின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications