நாடாளுமன்றத்தில் கேரள நிலச்சரிவு விவகாரம்.. தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை! மத்திய அரசு பதில் என்ன
டெல்லி: நமது அண்டை மாநிலமான கேரளாவில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்பிக்கள் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.
கேரளாவில் இன்று அதிகாலை மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளே இந்தளவுக்குப் பாதிப்புகள் மோசமாகக் காரணமாக இருக்கிறது.

இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது வரை சுமார் 63 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த பல நூறு பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள்: இந்த மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம், போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குப் பல கிராமங்கள் நிலச்சரிவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் இப்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
தேசிய பேரிடர்: வயநாட்டில் ஏற்பட்ட இந்த மிக மோசமான நிலச்சரிவைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இதைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கேரளாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்களின் உதவி தேவை என்று சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குறித்து கவலை தெரிவித்த ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கர், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
மத்திய அமைச்சர்: இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நிலைமை சரி செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இது கேரளாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஏற்பட்ட சோகம்.
என்ன தேவையோ அதைச் செய்து தருவதாகக் கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது உயிரிழந்தோர் உடல்களை மீட்பதும்.. காயமடைந்தோரைக் காப்பாற்றுவதும் தான் முக்கியமான விஷயம்" என்றார். அதேநேரம் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர்கள் யாரும் பதிலளிக்கவில்லை.
விரைவில் அறிக்கை: தொடர்ந்து இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை ஆய்வு செய்வதற்காக இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் அதிகாலையில் கேரளாவுக்குச் சென்றுள்ளார்.. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, மத்திய ஆயுத போலீஸ் படைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications