‛‛எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்க’’.. ‛‛வாண்டடா’’ வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! பிரகலாத் ஜோஷி பகீர்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் எம்பிக்களே தானாக வந்து சஸ்பெண்ட் செய்யும்படி தன்னிடம் கோரிக்கை வைத்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி வழக்கம்போல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வந்தது. அப்போது லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று அரங்குக்குள் குதித்தனர். மேலும் ஸ்பிரே மற்றும் வண்ண புகையை வெளியேற்றும் குண்டுகளை வீசினர்.

இந்த வழக்கில் தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் லோக்சபா, ராஜ்யபசாவில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களின் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இரு சபைகளிலும் எம்பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்பிக்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் லோக்சபாவில் இருந்து 100 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 46 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே கூட்டத்தொடரில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று கூட நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் இருந்து எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி கோரிக்கை வைத்தோம். அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து சில எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிற எம்பிக்கள் எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள் என்ற கோரிக்கையுடன் வந்தனர்.
சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியபோதும் நாங்களும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், எங்களையும் சஸ்பெண்ட் செய்ய வண்டும் எனவும் கூறினார்கள். காங்கிரஸ் கட்சி செயல்பாடு என்பது இப்படித்தான் இருக்கிறது” என தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications