மணிப்பூர் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு கறுப்பு உடையுடன் வரும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து இன்று 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வருகை தர உள்ளனர்.
மணிப்பூரில் 3 மாதங்களாக நீடித்து வரும் வன்முறைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்பது இந்தியா கூட்டணி எம்பிக்களின் குற்றச்சாட்டு. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர கோரி எதிர்க்கட்சிகள் இரு சபைகளையும் 5 நாட்களாக முடக்கி வைத்துள்ளனர்.

அத்துடன் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக லோக்சபாவில் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸின் கவுரவ் கோகோய் கொடுத்த இந்த நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது எப்போது விவாதம் நடைபெறும் என்பதும் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் அடுத்த கட்டமாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் இன்று கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தர உள்ளனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications