பெகாசஸ் லேட்டஸ்ட் வெர்சன் இருக்கானு கேளுங்க பிரதமரே 2024ல் தேவைப்படும் - கிண்டலடித்த ப.சிதம்பரம்
டெல்லி : பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பாக பெகாசஸ் ஸ்பைவேரின் அப்கிரேட் வெர்சன் அதாவது மேம்பட்ட பாதிப்பு ஏதும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் பிரதமர் மோடி கேட்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கிண்டல் அடித்துள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், பல பிரபலங்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அரசு இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை விலை கொடுத்து வாங்கியதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பெகாசஸ் விவகாரம்
இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ப.சிதம்பரம் தனக்கே உரித்தான பாணியில் கிண்டலடித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பெகாசஸ் சர்ச்சை குறித்து எதிர்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவுகளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ வெளியிட்டார். அதில் இரு நாடுகளுக்கிடையேயான உறவின் வரலாறு மிகவும் பழமையானது எனவும், பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையே வலுவான உறவு உள்ளது என்று பிரதமர் கூறினார்.

ப.சிதம்பரம் கிண்டல்
இந்நிலையில் இந்த வீடியோவை வைத்துதான் பிரதமரை ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சி, இந்தியா-இஸ்ரேல் உறவில் புதிய இலக்குகளை அமைக்க இது சிறந்த நேரம் என்று பிரதமர் கூறினார். நிச்சயமாக, பெகாசஸ் ஸ்பைவேரின் மேம்பட்ட பதிப்பு ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் கேட்க இதுவே சிறந்த நேரம் எனவும், கடைசி ஒப்பந்தம் $2 பில்லியன் எனவும் இந்தியா இந்த முறை சிறப்பாக செயல்பட முடியும் 2024 தேர்தலுக்கு முன்னதாக இன்னும் அதிநவீன ஸ்பைவேரைப் பெற்றால், நாங்கள் அவர்களுக்கு 4 பில்லியன் டாலர்களைக் கூட வழங்க முடியும் என பதிவிட்டுள்ளார்.

சாப்ட்வேரின் அப்டேட் வெர்சன்
2017 ஆம் ஆண்டில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை கருவிகளுக்காக இஸ்ரேலுடன் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அரசாங்கத்தால் வாங்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேரின் மேம்பட்ட பதிப்பு ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் கேட்குமாறும், 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடு மிகவும் அதிநவீன மென்பொருளைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், இஸ்ரேலிய நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர்களைக் கூட செலுத்த முடியும் என்றும் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் உறுதி
இந்த பதிவு தற்போது பலராலும் விரும்பப்பட்டு அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், ஸ்பைவேர் சர்ச்சையில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் மீதான தாக்குதலை காங்கிரஸ் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரியகையாளர்கள் நீதித்துறையின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications