பாகிஸ்தானுக்குள் இந்திய பெண் நுழைய அனுமதி மறுப்பு.. பாக். கணவர், குழந்தைகளைப் பிரிந்து மனைவி கண்ணீர்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானியரை திருமணம் செய்திருந்த இந்தியப் பெண் ஒருவர் இந்திய பாஸ்போா்ட் வைத்திருந்ததால் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்படாமல் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதில் 27 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாள்களில் 272 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானும் இந்தியர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. அதன்படி, 629 இந்தியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானியரை திருமணம் செய்திருந்த இந்தியப் பெண் ஒருவர் இந்திய பாஸ்போா்ட் வைத்திருந்ததால் பாகிஸ்தான் அதிகாரிகள் அந்நாட்டுக்குள் அனுமதிக்காமல் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பினர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரை சோ்ந்தவர் சனா. இவர் பாகிஸ்தானியர் ஒருவரை திருமணம் செய்து அந்நாட்டில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் 45 நாள் நுழைவு இசைவு விசா மூலம் இந்தியாவுக்கு சனா வந்துள்ளார். பஹால்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 24 ஆம் தேதி சனா மற்றும் தனது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு வாகா எல்லை வழியா செல்ல சனா முயன்றுள்ளார். ஆனால், இந்திய பாஸ்போர்ட்டை சனா வைத்திருந்ததால் பாகிஸ்தானுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சனாவின் இரண்டு குழந்தைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் அவா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா். ஆனால், இந்திய பாஸ்போர்ட்டை சனா வைத்திருந்ததால் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனாலும், தனது குழந்தைகளை பாகிஸ்தானுக்குள் தனியாக அனுப்ப சனா மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியார்களிடம் சனா கூறியதாவது: என்னுடைய விசா காலாவதியாவிட்டது. இதையடுத்து, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். பாகிஸ்தானுக்கு எனது குழந்தைகளுடன் வாகா எல்லை வழியாகச் செல்ல முயன்றோம். ஆனால், பாகிஸ்தானுக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications