"பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு.. நாம் கொடுத்திருப்பது ஒரு மெசேஜ்”.. முன்னாள் இந்திய தூதர் காட்டம்!
டெல்லி: "பாகிஸ்தான் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு" என முன்னாள் இந்திய தூதர் வித்யா பூஷண் சோனி தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய தூதர் வித்யா பூஷண் சோனி, இந்தியா உடனான தொடர்ச்சியான பதற்றச் சூழலுக்கு காரணமான பாகிஸ்தானின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். உள்நாட்டு குழப்பம் காரணமாக திறம்பட பதிலளிக்க முடியாத "தோல்வியடைந்த நாடு" என்று பாகிஸ்தானை சாடியுள்ளார்.

முன்னாள் தூதர் பேட்டி
முன்னாள் இந்திய தூதர் வித்யா பூஷண் சோனி ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "பாகிஸ்தான் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் ஒரு தோல்வியுற்ற நாடு என்பதால், அந்நாடு எந்த விதத்திலும் பதிலளிக்க முடியாது. இதை அனைத்து சர்வதேச நிறுவனங்களும் உலக அமைப்புகளும் பல தசாப்தங்களாக ஒப்புக் கொண்டுள்ளன.
அவர்கள் அதற்குத் தயாராக இல்லாதபோது அவர்கள் என்ன பதில் அளிக்க முடியும்? பாகிஸ்தான் அரசாங்கத்தின் எந்தப் பகுதி தயாராக உள்ளது? மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. பயங்கரவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன" என்று சோனி கூறியுள்ளார்.
முட்டாள்தனம்
மேலும், "பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் அறிக்கைகள் பெரும்பாலும் தொழில்முறையானவை அல்ல, கள நிலைமையுடன் தொடர்புடையவை அல்ல. இத்தகைய உள்நாட்டு உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும் ஒரு நாடு பிராந்திய பதட்டங்களைத் தூண்டும் நடவடிக்கைகளை எடுப்பது பற்றி என்ன சொல்ல முடியும்?
பாகிஸ்தான் எப்படி இவ்வளவு முட்டாள்தனமான நடவடிக்கையை எடுத்திருக்க முடியும்? அவர்கள் இந்தியாவைத் தூண்டிவிட்டனர். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தாக்குதல் நடந்த பஹல்காம் மிகவும் அமைதியான, பாதுகாப்பான இடம் அவர்கள் ஏன் தூண்டி இருக்கிறார்கள்? ஏனென்றால் இது சுற்றுலாப் பருவத்தின் ஆரம்பம். இது முற்றிலும் தேவையற்றது.
பாகிஸ்தானுக்கு புரியும்படி மெசேஜ்
ஆனால் அவர்கள் அதைச் செய்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு மெசேஜ் அனுப்பப்பட வேண்டும். இந்தியா ஒரு பொறுப்பான நாடு. நாங்கள் மிகவும் பொறுப்புடன் பதிலளித்துள்ளோம்.
தவறு என்று கருதக்கூடிய எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கவில்லை. அவர்கள் தான் இதை ஆரம்பித்து வைத்தார்கள். போதும் என்று அவர்களே சொல்ல வேண்டும். நாங்கள் இனி அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
நம் இலக்கு தெளிவானது
இந்தியாவின் பதில் திட்டமிட்டு துல்லியமாக இருந்தது. பொதுமக்கள் பகுதிகளுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தது இந்திய ராணுவம். பதிலடி மிகவும் துல்லியமானது. இதை நான் அறுவை சிகிச்சை என்று கூறுவேன். எங்கள் இலக்குகள் தெளிவானவை.
பொதுமக்கள் இந்தியாவின் இலக்குகள் அல்ல. மூளைச்சலவை செய்து இந்தியாவில் பொதுமக்களுக்கு எதிராக மோசமான நடவடிக்கை எடுக்கத் தயாராகும் பயங்கரவாத முகாம்கள். நாங்கள் அதைத்தான் இலக்காகக் கொண்டுள்ளோம், அதைத்தான் நாங்கள் செய்தோம் என்று அவர்களிடம் கூறியுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்து தக்க பதிலடி கொடுத்ததை பொறுக்க மாட்டாமல் ஆத்திரத்தில் இந்தியா மீது டிரோன் தாக்குதலை ஏவி வருகிறது பாகிஸ்தான். அதனை இந்திய ராணுவம் நடுவானிலேயே முறியடித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications