நாடாளுமன்றம்: மகா கும்பமேளா கூட்ட நெரிசல் பலி குறித்து விவாதிக்க கோரி இரு சபைகளிலும் கடும் அமளி!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபாவில் உத்தரப்பிரதேச மாநில மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உங்களை இப்படி கோஷம் போடுவதற்காகவா மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தனர் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் 2025-26 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. இதேபோல பல்வேறு தொழில்துறை தரப்பினரும் பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற ஆய்வுக் குழு தாக்கல் ஆகியவை இன்று லோக்சபாவில் நடைபெற்றன.
இன்று காலை லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உத்தரப்பிரதேச மகா கும்பமேளாவின் கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எதிர்க்கட்சி எம்பிக்களின் இந்த முழக்கங்களால் அதிருப்தி அடைந்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மக்கள் உங்களை இப்படி கோஷம் போடுவதற்கும் மேஜைகளை உடைத்து முழக்கங்கள் எழுப்பவுமா அனுப்பி வைத்தார்கள்? என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் இரு சபைகளிலும் கடும் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications