மீண்டும் சர்ச்சையில் ஏர் இந்தியா..ட்விட்டரில் பொங்கிய பயணி..கொந்தளித்த நெட்டிசன்கள்..ஏன் தெரியுமா?
டெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் குறித்த பேச்சுக்கள் இன்னும் கூட முழுமையாக ஓயாத நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கல் கிடந்ததாக பெண் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமம் கடந்த ஆண்டு தன்வசப்படுத்தியது.
ஏர் இந்தியாவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு பயணிகளை கவரும் வகையில் புதுமைகளை புகுத்தி வந்த ஏர் இந்தியா மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை அடுத்தடுத்து தற்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கடிதம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்து கொண்டிருந்த விமானத்தில் 72 வயதான பெண் ஒருவர் பயணித்தார். பிசினஸ் வகுப்பில் பயணித்த இந்தப் பெண் மீது சக பயணியான சங்கர் மிஸ்ரா என்பவர் சிறு நீர் கழித்தார். இந்த சம்பவத்தில் விமான சிப்பந்திகளும் மெத்தனமாக செயல்பட்டதாக டாடா குழும தலைவர் என் சந்திரசேகரனுக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதிய பிறகுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது.

ஏர் இந்தியா நடந்து கொண்ட விதம்
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விமான பயணிகள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக பல தரப்பில் இருந்தும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல்கள் கொடுக்கப்பட்டன. ஏர் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சனம் எழுந்தது.

4 பணியாளர்கள் நீக்கம்
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சி இ ஓ கேம்ப்பெல் வின்சன் கூறுகையில், "விமானத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் எங்கள் பணியாளர்கள் இன்னும் இந்த விவகாரத்தை கையாண்டு இருக்க வேண்டும். இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த ஒரு விமானி, 4 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விமானங்களில் மது விநியோகிக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்படும்" என்றார்.

சாப்பாட்டில் கல் கிடந்ததாக
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் குறித்த பேச்சுக்கள் இன்னும் கூட முழுமையாக ஓயாத நிலையில், ஏர் இந்தியா அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் 215-ல் பயணித்த பெண் பயணி ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட சாப்பாட்டில் கல் கிடந்ததாக விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் சர்வர்பியா சங்க்வான் என்ற அந்த பெண் பயணி பதிவிட்டுள்ளதாவது:-

அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
கல் இல்லாத உணவை வழங்குவதற்கு உங்களுக்கு பெரிய அளவு பணமும் வளமும் தேவையில்லை. ஏர் இந்தியாவின் 215- விமானத்தில் எனக்கு இந்த உணவுதான் வழங்கப்பட்டது. விமான ஊழியரிடம் இது குறித்து முறையிடப்பட்டது. இதுபோன்ற அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பதிவிட்டு உணவில் கிடந்த கல்லை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுக்கடுக்கான விமர்சனங்கள்
ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக பயணி வெளியிட்டு இருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக நெட்டிசன்களும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் புகார் அளிக்கும் போது இதுபோல அலட்சியம் காட்டுவதாகவும் சர்வதேச அளவில் மதிப்பு மிக்க பிராண்ட் ஆக மாற்றுவோம் என்றும் உறுதி அளித்த ஏர் இந்தியா தற்போது மிகவும் மோசமான சேவை அளித்து வருவதாகவும் நெட்டிசன்கள் பலரும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

ஏர் இந்தியா பதில்
இதனிடையே, புகார் தெரிவித்த பெண் பயணிக்கு பதில் கொடுத்துள்ள ஏர் இந்தியா, "இது கவலை அளிக்கக் கூடியது. இந்த விவகாரத்தை உடனடியாக எங்கள் கேட்டரிங் குழுவிற்கு எடுத்துச் செல்கிறோம். எங்களுக்கு சற்று அவகாசம் கொடுங்கள். எங்கள் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு வந்ததற்காக உங்களை பாராட்டுகிறோம்" என்று பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications