நெஞ்சிலே ஈரமில்லை.. சென்னை டூ டெல்லி ரயிலில் இறந்த பயணி.. 600 கிமீ தூரம் உடலுடன் பயணித்த கொடுமை
டெல்லி: சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில், திடீரென பயணி இறந்துவிட்ட நிலையில், இறந்தவரின் உடலுடன் 600 கி.மீ தொலைவுக்கு பயணிகள் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள். மாதம் 10000 ரூபாய் கூட சம்பாதிக்கும் நிலை பல வட மாநிலங்களில் இல்லை. இதனால் வறுமையில் உள்ள அந்த மக்கள், மொழி தெரியாமல் தமிழகத்திற்கு வந்து இங்கு தரும் குறைந்த ஊதியத்திற்கு பல மணி நேரம் வேலை செய்கிறார்கள். வார விடுமுறை கூட எடுக்காமல் பலர் வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள் சொந்த ஊர் செல்ல ரயில்களை தான் நாடுகிறார்கள். கல்வி கற்க வாய்ப்பு இல்லாத வறுமை சூழலில் வளர்ந்த பலர் ரயிலில் புக்கிங் செய்து பயணிக்க தெரியாமல், பொதுப்பெட்டியில் இரண்டு மூன்று நாட்கள் பயணித்து சொந்த ஊர் செல்கிறார்கள். கொடுமையான அந்த மாதிரியான ரயில் பயணம் எப்படி இருக்கும் என்பது நம்மவர்கள் அனைவருக்குமே தெரியும்.
இன்றைக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதிகளுக்கு செல்லும் ரயிலில் சென்றால், அவர்கள் எந்த அளவிற்கு சிரமத்துடன் பொதுப்பெட்டியில் பயணிக்கிறார்கள் என்பது தெரியும்.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் பயணித்த வடமாநில பயணி ஒருவர், உடல் நலக்குறைவால் ஓடும் ரயிலில் இறந்துவிட்டார்.. அவரது உடலுடன் சுமார் 600 கிமீ தூரம் சக பயணிகள் பயணித்துள்ளனர்.. இந்த கொடுமையான சம்பவம் நாக்பூரில் தொடங்கி ஜான்சியில் முடிந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதாகும் ராம்ஜித் யாதவ், சென்னையில் உள்ள ஒரு நிறுவனததில் பணிபுரிந்து வந்தார்.. இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர் கோவர்தன் என்பவர், ராம்ஜித் யாதவை கடந்த 5ம் தேதி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில் (மதுரை -டெல்லி ரயில்) கூப்பிட்டு சென்றார்.
கோவர்தன் மற்றும் ராம்ஜித் யாதவ் என இருவரும் பொது பெட்டியில் பயணித்த நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூர் ரயில் நிலையத்தை கடந்துள்ளது. அப்போது உடல்நலன் மிகவும் மோசமடைந்து ராம்ஜித் யாதவ் ஓடும் ரயிலிலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர், ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ராம்ஜித் உடலுடன், சக பயணியரும் ரயிலில் சுமார் 600 கிமீ தூரம் பயணித்தனர். உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலில் இறந்த ராம்ஜித்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஓடும் ரயிலில் இறந்த நபரின் உடலுடன் 600 கி.மீ., தொலைவு வரை பயணித்த நிலையில், ரயில்வே துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காதது பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications