சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து! ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகனுக்கு தீக்காயம்!
டெல்லி: சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு படித்து வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பவன் கல்யாண் சிங்கப்பூருக்கு விரைகிறார்.
விசாகப்பட்டினத்தில் அரக்கு என்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ளும் பவன் கல்யாண் அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார். பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி அன்னா லெஸ்நேவா. ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். இவரை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பவன் கல்யாண் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் பவன் கல்யாணின் மகன் சிறுவயது முதலே சிங்கப்பூரில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பள்ளியில் இன்று காலை தீ விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இதில் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு கைகளிலும், கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.
தீ விபத்தால் ஏற்பட்ட புகையை அளவுக்கு அதிகமாக சுவாசித்ததால் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மகன் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.
இதையடுத்து இந்த விழாவை ஒத்தி வைத்துவிட்டு சிங்கப்பூர் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் பவன் கல்யாணோ "அந்த பகுதி மக்களுக்கு நான் வருவதாக அறிவித்துவிட்டேன். அவர்கள் காத்திருப்பார்கள். எனவே அவர்களை சந்தித்துவிட்டு நான் சிங்கப்பூர் புறப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் மனைவி அன்னா சிங்கப்பூரில் இருக்கிறார். அவர் அங்கு தனது மகனை பார்த்துக் கொள்வார் என தெரிகிறது. பவன் கல்யாண் அங்கு சென்றதும் இருவரும் சேர்ந்து மகனை பார்த்துக் கொள்வார்கள். பவன் சிங்கப்பூர் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications