துணை ஜனாதிபதி தேர்தல்: விவசாயி மகன், மக்களின் ஆளுநர்.. பாஜக தலைவர்களால் புகழப்பட்ட ஜெகதீப் தன்கர்
டெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாயி மகன், மக்களின் ஆளுநர் என்று பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரால் புகழப்பட்டவர் ஜெகதீப் தன்கர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் முடிவடைவதால் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19.

துணை ஜனாபதி பதவிக்கு இஸ்லாமியர் ஒருவரை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கும் என கூறப்பட்டு வந்தது. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்விக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பாஜக கூட்டணி தமது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது.
1951-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். 1962-ல் சைனிக் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் பட்டப் படிப்புகளையும் முடித்தவர் ஜெகதீப் தன்கர். 1989-ல் ராஜஸ்தான் ஜுன்ஜுனு லோக்சபா தொகுதியில் ஜனதா தளம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ல் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1993-98ல் ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2003-ம் ஆண்டு முதல் பாஜகவில் தனது அரசியல் பயணத்தை இணைத்துக் கொண்டார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகதீப் தன்கர், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்கத்தில் ஆளுநராகப் பதவியேற்றது முதல் அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, முதல்வர் மமதா பானர்ஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. சட்டசபை தேர்தலுக்கு பின் வன்முறை ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார் ஜெகதீப் தன்கர். அண்மையில் மேற்கு வங்க மாநில பல்கலை கழகங்களில் இனி மாநில முதல்வர்தான் வேந்தர் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஜெகதீப் தன்கரை இலக்கு வைத்துதான் இந்த தீர்மானத்தை முதல்வர் மமதா பானர்ஜி கொண்டு வந்தார்.
பிரதமர் மோடியால் விவசாயி மகன் என்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவால், மக்கள் ஆளுநர் என்றும் புகழாரம் சூட்டப்பட்ட ஜெகதீப் தன்கர் தற்போது நாட்டின் துணை ஜனாதிபதி வேட்பாளராக , பாஜக கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications