டிசம்பரில் ஃபைசர் மற்றும் பயான்டெக் கொரோனா தடுப்பு மருந்து!
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்து டிசம்பர் மாத மத்தியில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் கொரோனா 2-ம் கட்ட அலையாக மிக மோசமாக தாக்கி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் 2-ம் கட்ட கொரோனா தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வந்து ஆறுதலை தந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா மருந்துகள்
ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து 95% பலனைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி 94.5% செயல் திறன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் 92% பலன்தரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் மருந்து
இவற்றில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி அமெரிக்காவில் விண்ணப்பிக்கப்பட உள்ளது. இதனிடையே தற்போதைய சுமூக நிலை தொடர்ந்து நீடித்தால் டிசம்பர் மாதம் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

கட்டமைப்பில் சிக்கல்?
அதேநேரத்தில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா பயன்படுத்துவதில் சில கட்டமைப்பு சிக்கல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த தடுப்பு மருந்துகளை உறைநிலைக்கு கீழே 70 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும்; ஆனால் இந்தியாவில் இத்தகைய கட்டமைப்பு என்பது வெகு குறைவு எனவும் கூறப்படுகிறது.

தடுப்பு மருந்துக்கு ஒப்பந்தம்
தற்போது பரபரப்பாக பேசப்படும் இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதிலும் விநியோகிப்பதிலும் உள்ள சிக்கல்களை களையவும் தீவிர நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தேவைப்படுகின்றன. இன்னொருபக்கம் வெளியிடப்பட இருக்கும் நம்பிக்கைகுரிய கொரொனா தடுப்பு மருந்துகளை பல கோடி கணக்கில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications