கொரோனா ...பிளாஸ்மா தெரபி...உயிரிழப்பு குறையவில்லை... ஐசிஎம்ஆர் ஆய்வில் முடிவு!!
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையால் உயிரிழப்பு விகிதம் குறையவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல இடங்களில் இந்த சிகிச்சை ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
நாடு முழுவதும் 39 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு இருந்தது. இதற்கான செலவை கவுன்சில் ஏற்றுக் கொண்டு இருந்தது. ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

அதிரடிப்படை
நாடு முழுவதும் இருந்து 464 பேர் இதற்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தனர். இந்த ஆய்வை மறுஆய்வு செய்தற்காக தேசிய அளவில் கோவிட் 19 அதிரடிப் படை ஒன்றை ஐசிஎம்ஆர் உருவாக்கி இருந்தது. பிளாஸ்மா தெரபியை கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கலாம் என்று கடந்த ஜூன் 27ஆம் தேதி ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கள்ளச் சந்தை
இதையடுத்து மருத்துவமனைக்கே வந்து சிலர் ரத்த தானம் செய்தனர். ஆனால், பலரும் சட்ட விரோதமாக ரத்த தானம் செய்து அதையும் வர்த்தகமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிக விலைக்கு இந்த ரத்தத்தை கள்ளச் சந்தையில் விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.

முன்னேற்றம் இல்லை
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிளாஸ்மா சிகிச்சையாலும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும், பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் எந்த பலனையும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்து 28 நாட்கள் கழித்து பார்க்கும்போதும், அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை அல்லது உயிரிழப்பிலும் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆன்டிபாடிகள்
கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் ஆன்டிபாடீஸ்கள் பிரித்து எடுக்கப்படும், பிரித்து எடுக்கப்பட்ட அந்த ஆன்டிபாடிகள் நோயாளியின் உடலில் செலுத்தப்படும். இதுவே, பிளாஸ்மா தெரபி என்று கூறப்படுகிறது.

நெதர்லாந்து
இந்த முறையிலான சிகிச்சைக்கு சீனா, நெதர்லாந்து எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவின. இந்த இரண்டு நாடுகளிலும் ரத்த தானம் செய்வதற்கு என்று பெரிய அளவில் யாரும் முன் வரவில்லை. மேலும், இடைக்கால கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சோதனையை மறுவடிவமைப்பு செய்ய முடியாமல் நெதர்லாந்து நிறுத்திக் கொண்டது. சமீபத்தில் இந்த தெரபிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அனுமதி அளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications