சட்டசபை தேர்தலால் செம ஜாக்பாட்.... மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் உ.பி.க்கு 7; குஜராத்துக்கு 5 இடங்கள்
டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு 7, குஜராத்துக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்க பாஜக படுதீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் உ.பி, குஜராத்துக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினர் 6 பேருக்கும் கூட்டணி கட்சியான அப்னா தள் தலைவர் அனுப்பிரியா படேலுக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
உ.பி. பாஜகவின் கெளஷல் கிஷோர், எஸ்.பி. பாகெல், பங்கஜ் செளத்ரி, பிஎல் வர்மா, அஜஸ் மிஸ்ரா, பானு பிரதாப் வர்மா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். குஜராத்துக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத்தின் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபலா மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுடன் குஜராத்தின் தர்ஷனா ஜர்டோஸ், மகேந்திர முஞ்பரா, தேவ்சின் செளகான் ஆகிய குஜராத் எம்.பி.க்கள் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் எம்.பி, பிரதிமா போய்முக் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications