பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க.. தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி! ஏன் முக்கியம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தாய்லாந்துக்கு அரசு முறைப் பயணமாகப் புறப்பட்டார். இந்த பயணத்தில் அவர் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், அங்குள்ள இந்தியச் சமூகத்தினர் உடனும் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து தாய்லாந்தில் இருந்து பிரதமர் மோடி, இலங்கைக்குச் செல்லவுள்ளார்.
வங்காள விரிகுடாவை ஒட்டி இருக்கும் நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பிம்ஸ்டெக்- அதாவது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு
இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உள்ளன. இக்கூட்டமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இந்த மாநாடு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி
தனது இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி, "(தாய்லாந்து) பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று தாய்லாந்துக்குச் செல்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், வங்காள விரிகுடா பகுதியில் பிராந்திய மேம்பாடு, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க அமைப்பாக BIMSTEC உருவெடுத்துள்ளது. பிம்ஸ்டெக் தலைவர்களைச் சந்தித்து, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ல் நேபாளத்தில் பிம்ஸ்டெக் அமைப்பின் 4ஆவது உச்சி மாநாடு நடந்த நிலையில், அதன் பிறகு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் மாநாடு இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2022இல் இலங்கையில் நடந்த பிம்ஸ்டெக் அமைப்பின் 5ஆவது உச்சி மாநாட்டுக் காணொலி வாயிலாகவே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திட்டம் என்ன
பிரதமர் நரேந்திர மோடி இந்த பயணத்தில் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை சந்தித்துப் பேசுகிறார். மேலும், அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் உடனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின்போது அவர் நேபாள பிரதமர் கே. பி. சர்மா ஓலி மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.
இலங்கை பயணம்
பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு அப்படியே இலங்கை செல்லவுள்ளார். வரும் ஏப்ரல் 4-6 தேதிகளில் அவர் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்குச் செல்லவுள்ளார். கடந்த டிசம்பரில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்தியா வந்து சென்ற நிலையில், இப்போது இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அதிலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications