'உலகளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்த பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார்'.. சொல்வது நிர்மலா சீதாராமன்
டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்த பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை களங்கப்படுத்துகின்றன என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது சாடினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:- 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் இந்தியாவின் "சிறந்த முறையான வழி" உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது சிறந்த தடுப்பூசி திட்டத்திற்காக இந்தியாவை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே தடுப்பூசி மீது சந்தேகத்தை பரப்பின. இதை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.தடுப்பூசி போடுவதற்கும் ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் ரூ.36,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் பெண்களின் நுழைவு, சைனிக் பள்ளிகள் நிறுவுதல் ஆகியவை பா.ஜ.க தீர்மானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே எங்கள் குறிக்கோளாகும். பல கட்சித் தலைவர்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் விநியோகம் குறித்து வலியுறுத்தியுள்ளனர். மனித உயிர்களைக் கவனித்து, 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களுக்கு உணவு வழங்கினோம். 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
இத்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்படாத பிற மாநிலங்களிலும் அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே ரேஷன் பொருட்கள் பெற முடியும். எல்லா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஜம்மு காஷ்மீர் இப்போது பயங்கரவாதத்திலிருந்து வளர்ச்சிக்கு நகர்கிறது. 2004 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் 2,081 பேர் இறந்துள்ளனர். 2014 முதல் செப்டம்பர் 2021 வரை 239 பொதுமக்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஊழலற்ற நிர்வாகத்தை அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது. டிஜிட்டல் இந்தியா மூலம் மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளோம். இந்தியா மாற்றங்களை கவனித்து வருகிறது, டிஜிட்டல் இந்தியா மிஷன் அவற்றை துரிதப்படுத்துகிறது. மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா மிஷன் தேசத்தை வலுப்படுத்தும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.












Click it and Unblock the Notifications