துளசி கப்பார்டுக்கு கங்கை நீரை கிஃப்ட் ஆக கொடுத்த பிரதமர் மோடி! டெல்லி சந்திப்பில் நடந்த சுவாரசியம்
டெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துளசி கப்பார்டு, அஜித் தோவல் தலைமையில் நடந்த சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, இந்திய அதிகாரிகளுடன் சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி துளசி கப்பார்டுக்கு கங்கை புனித நீரை பரிசாக அளித்தார்.
அமெரிக்க தேசிய நுண்ணறிவு இயக்குநராக இருக்கும் துளசி கப்பார்டு, இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வந்த துளசி கப்பார்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு விவகாரம், தகவல் பரிமாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியை துளசி கப்பார்டு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் பரிசுகளை அளித்தனர்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் ஓடும் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட புனித தீர்த்தத்தை பரிசாக கொடுத்தார். மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் இருந்து இந்த புனித நீர் எடுக்கப்பட்டது. துளசி கப்பார்டு - பிரதமர் மோடி இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் வைத்து இருவரும் சந்தித்து பேசினர்.
இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பயங்கரவாதம், சைபர் அச்சுறுத்தல் உள்ளிட்டவை எதிர்கொள்வது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கோள்ள துளசி கப்பார்டு திட்டமிட்டு இருக்கிறார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
அதன்பிறகு தனது நிர்வாகத்தில் பலரையும் நியமித்தார். அந்த வகையில், அமெரிக்க உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டை நியமித்தார். அமெரிக்காவில் உள்ள உளவு மற்றும் விசாரணை அமைப்புகளான சிஐஏ, எப்.பிஐ, என்.எஸ்.ஏ உள்பட 18 உளவு அமைப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு துளசி கப்பார்டுக்கு உள்ளது.
முன்னதாக துளசி கப்பார்டு அளித்த பேட்டியின் போது, பகவத் கீதையின் போதனைகள் சவாலான காலங்களில் தனக்கு வழிகாட்டியதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் போர் சூழல் மிக்க பகுதிகளில் பணியாற்றும் போதும் சரி, தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி.. கடவுள் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு அளித்த போதனைகள் தனக்கு எல்லா கால கட்டத்திலும் உதவியாக இருந்து வந்துள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications