குவைத் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல்! காயமடைந்தோர் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
டெல்லி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெற்கு குவைத் பிராந்தியத்தின் மங்கஃப் நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பில் இந்தியத் தொழிலாளர்கள் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இது கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரும் என்டிபிசி குழுமத்தின் உரிமையாளருமான ஆபிரகாமுக்குச் சொந்த கட்டடம்.

இதில் கீழ்த்தளங்களில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கீழ்த்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்ணாடிகள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென மேல்நோக்கிப் பரவியது. தீ விபத்து நிகழ்ந்ததும் மாடியில் இருந்து பலர் குதித்துத் தப்ப முயன்றனர். எனினும் இந்த விபத்தில் 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்தியர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குவைத் தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் அனைத்தும் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களைப் பற்றித்தான் உள்ளது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications