ஷட்டப்பு... "பாரதம்", "இந்தியா" பற்றி மூச்சு கூட விடப்படாது.. மந்திரிமார்களுக்கு "மாமன்னன்" கட்டளை!!
டெல்லி: நாட்டுக்கு பாரதம் என பெயர் சூட்டுவது தொடர்பான சர்ச்சைகளில் மத்திய அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கின. அப்போது முதலே "இந்தியா" என்ற பெயரை மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். பிரதமர் மோடி, "இந்தியா" என்ற பெயரை கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்துக்கான செயல் திட்டம் என்ன என்பது தெளிவாக விளக்கப்படவில்லை.
அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஒரே நாடு ,ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அக்குழுவின் முதல் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே ஜி 20 மாநாட்டை முன்னிட்டு உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத ஜனாதிபதி என இடம் பெற்றிருந்தது புதிய சர்ச்சையாக வெடித்தது.
இதனால் நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதை "பாரதம்" என மாற்ற மத்திய அரசு முடிவெத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அத்துடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படலாம் எனவும் தகவல்கள் பரவின. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வந்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் போல, இந்தியா- பாரதம் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாகரங்களுக்கு நடுவே, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு குறித்து பேசியது திரிக்கப்பட்டு அதுவும் பெரிய சர்ச்சையானது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சனாதனம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டார் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவித்தன.
தற்போது, பாரத் அல்லது இந்தியா விவகாரத்தில் சற்று அமைதியாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாரத் அல்லது இந்தியா குறித்த சர்ச்சையை "ஆறப்போட்டு" பார்க்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. அதனாலேயே மத்திய அமைச்சர்களை அமைதி காக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications