"மாலத்தீவின் நம்பகமான நண்பன் இந்தியா!" ரூ.4850 கோடி கடனையும் அறிவித்தார் பிரதமர் மோடி
டெல்லி: இரு நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் முய்சுவை நேரில் சந்தித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அப்போது மாலத்தீவின் மேம்பாட்டிற்காக இந்தியா ரூ.4850 கோடி கடனை அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், மாலத்தீவின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு பல காலமாக நன்றாகவே இருந்தது. இருப்பினும், 2023ல் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை வைத்தே முய்சு ஆட்சியைப் பிடித்தார். அப்போது அவரது செயல்பாடுகளும், அவரது அமைச்சர்களின் சில கருத்துகளும் நிலைமையை மோசமாக்கியது. அதன் பிறகு சில காலம் மோதல் போக்கே நிலவி வந்தது. அதன் பிறகே மெல்ல நிலைமை சீராக ஆரம்பித்தது.
இந்தச் சூழலில் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இரு நாடுகளின் உறவுகள் வரலாற்றை விடவும் பழமையானவை என்றும், கடலைப்போல் ஆழமானவை என்றும் இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள மாலத்தீவுகளின் "நம்பகமான நண்பன்" இந்தியா என்பதை வலியுறுத்திய அவர், "எங்களுக்கு எப்போதும் நட்பே முதன்மையானது" என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா-மாலத்தீவு நட்பு எத்தகைய சூழ்நிலையிலும் பிரகாசமாக இருக்கும் என்றும் மோடி உறுதியளித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் உறவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சந்திப்பில் மாலத்தீவுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இந்தியா 4,850 கோடி ரூபாய் (565 மில்லியன் அமெரிக்க டாலர்) கடன் உதவி வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாலத்தீவு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று மோடி தெரிவித்தார்.
இரு நாடுகளும் விரைவில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
இந்த பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தம் இந்தியாவுக்கு மாலத்தீவுகள் செலுத்த வேண்டிய ஆண்டு கடன் தொகையை 40% குறைக்கும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். சீனா குறித்து மிஸ்ரி வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும் இந்தியா மாலத்தீவுகளுடன் இணைந்து பிராந்தியத்தின் பாதுகாப்பு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்று மட்டும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications