வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி! இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
டெல்லி: சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்த மோடி, இந்தியர்களை பாதுகாத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
சவுதியில் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். ஈரான் போர் காரணமாக நிலைமை மோசமடைந்திருப்பதால், சவுதி இளவரசரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

சவுதி இளவரசருடன் பேசிய மோடி
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் விவாதித்தோம். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.
இளவரசருக்கு நன்றி
பிராந்திய அமைதி மற்றும் இயல்புநிலையை விரைவாக மீட்டெடுப்பது மிக முக்கியமானது என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த கடினமான காலங்களில் இந்திய சமூகத்தின் நல்வாழ்வைக் கவனித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.
பஹ்ரைன் மன்னருடன் பேசிய மோடி
அதேபோல, பஹ்ரைன் மன்னருடனும் பேசியிருக்கிறார். இது குறித்து பதிவிட்டிருப்பதாவது. "பஹ்ரைன் மன்னர், ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது மற்றும் இந்த கடினமான நேரத்தில் அதன் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்திற்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஜோர்டான் மன்னர் மோடி பேச்சு
அதேபோல ஜோர்டான் மன்னரிடமும் மோடி பேசியிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் மோடி பதிவிட்டிருப்பதாவது, "ஜோர்டான் மன்னர் மாட்சிமை தங்கிய இரண்டாம் அப்துல்லாவுடன் பேசினேன். பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன். ஜோர்டான் மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
இந்த கடினமான நேரத்தில் ஜோர்டானில் உள்ள இந்திய சமூகத்தை கவனித்துக்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
