"தேர்தலில் வென்றாலும் மோடி அரசியலில் இருக்க போவதில்லை" காரணம் என்ன தெரியுமா? கெஜ்ரிவால் போட்ட குண்டு
டெல்லி: பாஜக மீண்டும் வென்றாலும் கூட மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற கெஜ்ரிவால், அடுத்து அமித் ஷாவை பிரதமராக்கவே இப்போது மோடி வாக்கு கேட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைதான கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், இன்று அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து..., ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்குத் திரண்டிருந்த ஆம் ஆத்மி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் சர்வாதிகாரத்திற்கு எதிராக நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
கெஜ்ரிவால்: அந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேலும் பேசுகையில், "ஒரு சர்வாதிகாரி நாட்டை கைப்பற்ற முயன்ற போதெல்லாம், நாட்டு மக்கள் அவரை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளனர். இன்று அப்படி தான் சர்வாதிகாரி ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கிறார்... அந்த சர்வாதிகாரிக்கு எதிராக நான் போராடுகிறேன் ஆனால் என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது. அந்த சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற 140 கோடி இந்தியர்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் ஓய்வு: இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என்று இவர்கள் (பாஜக தரப்பு) கேட்கிறார்கள். நான் பாஜகவிடம் கேட்கிறேன் உங்கள் பிரதமர் யார்? பிரதமர் மோடிக்கு அடுத்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயதாகிறது. உங்கள் கட்சியில் தான் 75 வயதாகும் அரசியல் தலைவர் ஓய்வு பெற்றுவிடுவாரே.. இந்த விதியை வகுத்ததே நரேந்திர மோடி தான்.
அமித் ஷா பிரதமர்: எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா என அனைவரும் இப்படி தான் ஓய்வு பெற்றனர்.. இதேபோல தான் பிரதமர் மோடி அடுத்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறப் போகிறார்... அவர்களின் அரசு என்று ஒன்று உருவானால்.. முதலில் யோகி ஆதித்யநாத்தை தூக்கி எறிந்துவிட்டு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்குவார்கள். எனவே பிரதமர் மோடி இப்போது அமித்ஷாவுக்கு ஓட்டு கேட்கிறார். மோடியின் உத்தரவாதத்தை அமித்ஷா நிறைவேற்றுவாரா?
பாஜக மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கடைசி நேரத்தில் பல மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியுள்ளார். மேலும், முதல்வரின் செயல்பாடுகளையும் தடுப்பார்கள். அதேபோல எதிரக்கட்சியினரையும் காலி செய்வார்கள். நீங்கள் பாஜகவின் பேர்ட்டனை பாருங்கள். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் இதையே தான் செய்கிறார்கள்" என்றார்.
பகவந்த் மான்: அதேபோல இந்த நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நபர் அல்ல.. அவர் ஒரு சித்தாந்தம்.. நீங்கள் ஒரு நபரைக் கைது செய்வீர்கள், ஆனால், சித்தாந்தத்தை எப்படி உங்களால் சிறைபிடிக்க முடியும். லோக்சபா தேர்தலில் 3 கட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 400 இடங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்த பிரதமர் மோடி, அதை அடைய முடியாது என்று உணர்ந்து கொண்டே இப்போது பேச்சை மாற்றியுள்ளார்" என்று பேசினார்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால் சிறையில் இருந்த நிலையில், அவர் லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஜாமீன் கோரியிருந்தார். இதையடுத்து அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications