என் மனம் காந்தி குடும்பத்துடன் இருக்கும்! சோனியா காந்தி தாய் மறைவு - இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
டெல்லி: சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ வயது மூப்பு காரணமாக காலமான நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் தந்தை கடந்த 1983 ஆம் ஆண்டு காலமானார். அவரது தாயார் பாவ்லா மைனோ 90 வயதை கடந்து இத்தாலி நாட்டில் வசித்து வந்தார்.
இவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அடிக்கடி இத்தாலிக்கு சென்று சந்தித்து வந்தனர். இந்த நிலையில் பாவ்லா மைனோவுக்கு நோய்வாய்பட்டு உடல் நிலை மோசமடைந்ததாக இத்தாலியிலிருந்து தகவல் வந்தது

மரணம்
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி பாவ்லா மைனோவை காண சோனியா காந்தி இத்தாலிக்கு சென்றிருந்தார். அவருடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இத்தாலிக்கு சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி பாவ்லா மைனோ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஜெய்ராம் ரமேஷ்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ இத்தாலியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி சனிக்கிழமை காலமானார். அவருக்கு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது." என்றார்.

காங்கிரஸ் இரங்கல்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோவின் மரணத்துக்கு காங்கிரஸ் குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மாவுக்காக பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக துணை நிற்போம்." என்று பதிவிட்டு உள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலையில் சோனியா காந்தியின் தாய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "தாயார் பாவ்லா மைனோவை இழந்து வாடும் சோனியா காந்திக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துக்கமான நேரத்தில் அவர்களின் குடும்பத்துடன் என மனம் இருக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications