உ.பி. வன்முறை.. மத்திய அமைச்சர் மகனின் படுபாதக செயல்.. மம்தா, கெஜ்ரிவால் கடும் கண்டனம்!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை இவர்களின் குரலுக்கு செவிசாயக்கவில்லை.
இதனால் விவசாயிகள் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்; இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

வன்முறை
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பாஜக தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். பாஜக தொண்டர்களும் விவசாயிகளை கலந்து போக சொன்னதால், அங்கு பெரும் கலவரம் மூண்டது. அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதில் 2 விவசாயிகள் இறந்து விட்டனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

8 பேர் உயிரிழப்பு
இதன்பிறகு இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் உள்பட பல கார்களை விவசாயிகள் தீ வைத்து கொளுத்தினார்கள். இந்த வன்முறையில் விவசாயிகள், பாஜக தொண்டர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதி 2 பேரை கொன்றது மட்டுமின்றி, ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அகிலேஷ் யாதவ்
ஆனால் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இதனை மறுத்துள்ளார். சம்பவம் நடந்தபோது என் மகன் அங்கு இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த வன்முறையை பாஜக நிகழ்த்தியதாக பல்வேறு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் "பண்ணை சட்டங்களை எதிர்க்கும் அமைதியான விவசாயிகளை மிதிப்பது உள்துறை இணை அமைச்சரின் மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான செயல்'' என்று கூறியுள்ளார்.

மம்தா, கெஜ்ரிவால்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, "இது பிஜேபி அரசின் சர்வாதிகாரத்தையும் கொடுமையையும் காட்டுகிறது, இது அவர்களின் உண்மையான முகம்'' என்று தெரிவித்துள்ளார். லக்கிம்பூரில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதச் செய்து வன்முறையில் ஈடுபடுவது அநியாயம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுளளார். இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications