சாத்வி பிரக்யாவை இந்துத்துவாவின் புதிய முகமூடியாக முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சாத்வி பிரக்யாவை இந்துத்துவாவின் புதிய முகமூடியாக முன்வைப்பதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். படுதீவிரமாக இருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரையில் யாரை எங்கே வைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே. அத்வானியையே அமித்ஷா அண்ட் கோ இன்று பந்தாடுகிறது எனில் ஆர்.எஸ்.எஸ். கைங்கர்யம்தான்.
அதே கதிதான் பாஜகவின் பிரசார பீரங்கியாக, இரும்புப் பெண்மணியாக வலம் வந்த உமாபாரதிக்கும் நேர்ந்திருக்கிறது. உமாபாரதியின் போபால் லோக்சபா தொகுதியில் இப்போது பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா நிறுத்தப்பட்டுள்ளார்.

உமாபாரதி அதிருப்தி
பிரக்யாவுக்கு தேர்தல் பணியாற்றுவதற்காகவே ஆர்.எஸ்.எஸ். 5 மூத்த தலைவர்களை களம் இறக்கியிருக்கிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த உமாபாரதி, சாத்வி பிரக்யா பெரிய துறவி.. அவரையும் என்னையும் ஒப்பிடலாமா? என கொந்தளித்திருந்தார்.

தெனாவெட்டு சாத்வி
இதையடுத்து சாத்வி பிரக்யாவை போபாலில் உமாபாரதி சந்திக்க நேரிட்டது. அப்போது பிரக்யா காரில் அமர்ந்திருக்க, உமாபாரதி வெளியில் நின்று கொண்டிருந்தார். பிரக்யா கண்ணீர்வடிக்க அவரை ஆறுதல்படுத்தியதுடன் தலைதாழ்ந்து உமாபாரதி வணக்கம் செலுத்தினார். இந்த காட்சியை பார்த்த அனைவருக்குமே சாத்வி பிரக்யாவுக்கு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பதை உணராமல் இருக்க முடியாது.

சர்ச்சைகளின் சங்கமம்
இத்தனைக்கும் 100 பேரை படுகொலை செய்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்தவர் சாத்வி பிரக்யா. சிறையில் இருந்து விடுதலையானது முதலே சர்ச்சைக்குரிய பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் பிரக்யா.

அதிருப்தி குரல்கள்
பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையமும் சூடு போட்டுள்ளது. ஆனால் அவரது வாய் ஓய்ந்தபாடில்லைதான். சாத்வி பிரக்யாவை இப்படி விழுந்து விழுந்து முன்னிறுத்துவதை பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லை. கடந்த ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் ஒரே முஸ்லிம் வேட்பாளரான ஃபாத்திமா ரசூல், சாத்வி பிரக்யாவுக்கு பிரசாரம் செய்ய மறுத்துவிட்டார். அதேபோல் மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த கார்கரே குறித்த சாத்வி பிரக்யாவின் விமர்சனம் மாணவர்களிடையேயும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

சாத்வி பிரக்யாவின் விஸ்வரூபம்
இதைப்பற்ரி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சாத்வி பிரக்யாவை ஆர்.எஸ்.எஸ். வலிந்து வளர்த்தெடுக்கிறது. இன்று அத்வானியை அலட்சியம் செய்யும் அமித்ஷா, மோடிகள் நாளை சாத்வி பிரக்யாவில் ஓரம்கட்டப்படும் நிலைமை வந்துவிடும்போலத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications