ஓவர்.. ஓவர்.. பஞ்சாயத்து ஓவர்! அஸ்ஸாம் தொகுதிகள் மறுவரையறைக்கு ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: அஸ்ஸாம் மாநில தொகுதிகள் மறுவரையறை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா அறிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநில தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக ஜூலை 19-ந் தேதி முதல் ஜூலை 21-ந் தேதி வரை குவஹாத்தியில் தேர்தல் ஆணையம் பொது விசாரணை நடத்தி இருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த மறுவரையறை நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டன.

31 மாவட்டங்கள் மற்றும் 20 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குவஹாத்தி பொது விசாரணையில் ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாரதிய ஜனதா கட்சி ஆகிய தேசிய கட்சிகள், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அசாம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை பங்கேற்று பல்வேறு கருத்துகளை முன்வைத்தன.
Today the Honorable President has approved the Delimitation Notification issued by the Election Commission of India for Assam.
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 16, 2023
A significant milestone has been achieved in the history of Assam.
Jai Maa Bharati
Jai Aai Asom pic.twitter.com/TAtJShfxK0
மேலும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் அவசரம் அவசரமாக மறுவரையறை நடவடிக்கை ஏன்? என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வியாகவும் இருந்தது. ஆனால் 1976-ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போதுதான் மறுவரையறை மேற்கொள்ளப்படுகிறது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.
இதன்பின்னர் கடந்த வாரம் தேர்தல் ஆணையமானது அஸ்ஸாம் தொகுதி மறுவரையறை தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட்டது. இதன்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் 14 லோக்சபா தொகுதிகள், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனித் தொகுதிகள் மற்றும் எஸ்டி தொகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பட்டியல் இனத்தவருக்கு 1 லோக்சபா தொகுதி, 9 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடி மக்களுக்கு 2 லோக்சபா தொகுதிகள், 19 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அத்துடன் ஒரு லோக்சபா மற்றும் 19 சட்டசபை தொகுதிகளின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தரங் என்ற லோக்சபா தொகுதியின் பெயரானது தரங்-உடல்குரி என திருத்தப்பட்டிருக்கிறது. இதேபோல சட்டசபை தொகுதிகள் பலவற்றுக்கு இரட்டைப் பெயராக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த மறுவரையறை இறுதி அறிக்கைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிம்ந்த பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications