இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. இணைந்து பணியாற்ற அழைப்பு!
டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள அநுர குமார, இரு நாட்டின் நலனுக்காக இணைந்து பணியாற்றலாம் என்றும் கூறியுள்ளார்.
சமீப காலங்களாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வந்தது. நெருக்கடியை தொடர்ந்து வெடித்த போராட்டம் காரணமாக, அந்நாட்டின் அதிபர், இலங்கையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த பின்னணியில்தான் கடந்த 21ம் தேதி இலங்கையின் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அது யாருக்கும் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அனுர குமார இன்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.
இவர் இலங்கையின் 9வது அதிபர் ஆவார். அனுர குமார திசநாயக்க அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர், ஜேவிபி (ஜனதா விமுக்தி பெருமுனா) எனப்படும் இடதுசாரி கட்சியின் தற்போதைய தலைவராக உள்ளார். இவர் இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர்.
ஏகேடி என அழைக்கப்படும் அனுர குமார திசநாயக்க கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு, இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது x தளத்தில், “இலங்கையின் புதிய அதிபர் திசநாயகவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் நட்பு நாடுகளுக்கான கொள்கையிலும், விஷன் சாகரிலும் இலங்கை முதல் இடத்தில் இருக்கிறது. இரு நாடுகளின் நலனுக்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த திசநாயக, “இரு நாடுகளின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications