அடுத்த சரண கோஷம்! ஒரே நாடு- ஒரே உரம்! மத்திய பாஜக அரசின் பாரத் மக்கள் உரத்திட்டம் தொடக்கம்!
டெல்லி: ஒரே நாடு ஒரே உரம் என்ற பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ16,000 கோடி நிதி இன்று வழங்கப்பட்டது.
"பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் 2022" என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும், 1500 வேளாண் புத்தொழில் நிறுவனத்தினரும் பங்கேற்றனர். காணொலிக் காட்சி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களும் இந்த சம்மேளனத்தில் பங்கேற்றனர்.

கிசான் சம்ரிதி மையங்கள்
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக சம்ரிதி மையங்களாக மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூர்த்தி செய்யும். இதனுடன், வேளாண் சம்பந்தமான உரங்கள், விதைகள், மண், விதைகள், உரங்களின் பரிசோதனைக்கான வசதிகள்; விவசாயிகளிடையே விழிப்புணர்வு; பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த தகவல்களை இந்த மையங்கள் வழங்குவதோடு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சில்லறை வணிகர்களின் திறன் கட்டமைப்பையும் உறுதி செய்யும். சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையகங்களை இத்தகைய சம்ரிதி மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே உரம்
இந்த நிகழ்ச்சியின் போது பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற பெயரில் ஒரே நாடு, ஒரே உர திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். "பாரத்" என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக பாரத் யூரியா பைகளையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ16,000 கோடி விடுவிப்பு
விவசாயிகளின் நலன் குறித்த பிரதமர் மோடியின் தொடர் உறுதிப்பாடின் வெளிப்பாடாக, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக, நேரடி பலன் பரிவர்த்தனையின் மூலம் ரூ. 16,000 கோடியை நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி விடுவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வீதம் 3 தவணையாக தலா ரூ. 2000 வழங்கப்படும். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் எட்ஜ் இதழ் அறிமுகம்
வேளாண் புத்தொழில் உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது 'இந்தியன் எட்ஜ்' என்ற உரம் சம்பந்தமான மின்னணு இதழையும் (e-magazine) பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரம் நிறைந்த உரம் வழங்கப்படும். இந்தியா, சர்வதேச அளவில் வேளாண் பொருட்கள் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications