10 ஆண்டுகளுக்கு பின் லோக்சபாவில் அனல் பறந்தது! ராகுல் காந்தியுடன் மோடி, அமித்ஷா காரசார விவாதம்!
டெல்லி: லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடியே எழுந்து பதிலடி கொடுத்தார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. லோக்சபா தேர்தலில் வென்ற எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

ராகுல் காந்தி: இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது இன்று லோக்சபாவில் விவாதத்தில் அனல் பறந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் காந்தி பேசிய நிலையில், அப்போது மத்திய அமைச்சர்கள் பலரும் குறுக்கிட்டுப் பதிலளித்தனர். குறிப்பாக இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக எழுந்து பதில் கொடுத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தளவுக்குக் காரசார விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.
முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார். இருப்பினும், பதாகைகளை அவையில் காட்ட அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய நிலையில், சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் படம் பதாகை இல்லை அது ஒரு ஆவணம் என்று அவர் தெரிவித்தார்.
விமர்சனம்: அரசியல் சாசனத்தின் நகலை லோக்சபாவில் காட்டி பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது பல முறை அவரது பேச்சை மத்திய அமைச்சர்கள் குறுக்கிட்டனர்.
ராகுல் காந்தி பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இந்துக்களை வன்முறையாளர்களாகக் காட்ட ராகுல் முயல்கிறார் என்ற பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றும் பேசினார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் குறுக்கிட்டார். தான் அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றி நடந்து வருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மதிப்பளிக்க அரசியலமைப்புச் சட்டம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கூச்சல் குழப்பம்: ராகுல் காந்தி பேசும் போது நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது. ராகுல் காந்தி பேசும் போது, அதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், ராகுல் காந்தி பேசும் போது அமித் ஷாவும் குறுக்கிட்டுப் பேசினார். ராகுல் காந்தி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமித் ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுபோல அனல் பறக்கும் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications